india

img

ராஜஸ்தானில் பாஜகவுக்குத் தொடரும் தோல்வி.. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி....

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில், 6 மாவட்ட ஊராட்சி மற்றும் 78 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர், தவுசா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், சவாய், மதோபூர், சிரோஹி ஆகிய 6 மாவட்ட ஊராட்சிகளுக்கும், இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 78 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 26, 29 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற 6 மாவட்ட ஊராட்சிகளில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், சவாய் மாதோபூர், தவுசா ஆகிய நான்கு மாவட்ட ஊராட்சிகளை காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. சிரோஹி மாவட்ட ஊராட்சியில் மட்டும் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. பாரத்பூர் மாவட்ட ஊராட்சியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள 37 வார்டுகளில் 17 வார்டுகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 14 வார்டுகளையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும், பிஎஸ்பி 2 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன. இதனால், சுயேச்சைகள் மற்றும் பிஎஸ்பி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே பாரத்பூர் மாவட்ட ஊராட்சியை பாஜக பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.மொத்தமுள்ள 200 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், காங்கிரஸ் 99 வார்டுகளையும், பாஜக 90 வார்டுகளையும், பிஎஸ்பி 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 8 வார்டுகளையும் வென்றுள்ளனர்.

இதேபோல, 78 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,564 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 670 வார்டுகளைக் கைப்பற்றிய நிலையில், பாஜக-வுக்கு 551 வார்டுகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக-வைத் தவிர, ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி 40 வார்டுகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 11 வார்டுகளையும், சுயேச்சைகள் 290 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.இந்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமுள்ள 78 ஊராட்சி ஒன்றியங்களில் 60-இல் காங்கிரஸ் பெரும்பான்மை பெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை விட அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த பாஜக கூடுதலான இடங்களில் வென்றிருந்தது. இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிடம் அதிகமான இடங்களில் பாஜக தோற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 21 மாவட்டங்களில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியிடம் பெரும்பாலான இடங்களில் பாஜக தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

;