சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக உள்ள நடைமுறையில், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பெயர், தேசியம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது, சர்வதேச பயணிகளின் தனிப்பட்ட விவரங்களான பயணிகளின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், பயணச்சீட்டு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்கள், இருக்கை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிறுவனங்கள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை தேவைப்பட்டால், அமலாக்கத்துறை, வெளிநாட்டு சட்ட ஒழுங்கு அமைப்புகளிடம் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறினால், விமான நிறுவனங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.