பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அரசியல் சூழ்ச்சியால் இறுதிப் போட்டிக்கு முன் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், வெள்ளிப் பதக்கம் தருமாறு வினேஷ் போகத் மேல்முறையீட்டுக்குச் சென்றபோதும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக கனத்த இதயத்துடன் ஓய்வை அறிவித்தார்.
இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு மக்கள் அனைவரும் தங்களின் அன்பைப் பதக்கங்களாகச் சூடினர். மக்களின் அன்பைக் கண்டு வியந்து போன வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து விலகினாலும், மற்ற போராட்டங்களை கைவிடமாட்டேன் என அறிவித்தார்.
இதனிடையே ஹரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பும் வெளியான சமயத்தில் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டி யிடப் போவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக, புதனன்று வினேஷ் போகத்தும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் எம்.பி.,யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து வெள்ளியன்று வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலை யில் அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸில் இணைந்தனர். காங்கிரஸில் இணைவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பு ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக வினேஷ் போகத் அறிவித்திருந்தார். வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.