யானைகள் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி அதன் வலசைப் பாதையில் நெடுந்தூரம் நடந்தும் செல்லும். அப்படி செல்லும் போது, அதன் பாதையில் யானைகள் மனித மோதல் ஏற்படுகிறது.
குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. இதனால் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், மனிதர்கள் யானைகளை துன்புறுத்தும் சம்பவமும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மனித விலங்கு மோதலை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ச்மூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கு வங்க எம்.பி. ராஜூ பிஸ்தா இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு
மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் யானை தாக்கியதில் 2,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக ஒடிஷாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 246 பேர் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2016 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் யானை தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50க்கு குறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஒவ்வொரு மாநிலத்திலும் விலங்கு – மனித மோதலைத் தடுக்க பல்வேறு வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.