india

img

சச்சின், லதா மங்கேஷ்கருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதா? மகாராஷ்டிர அரசு விசாரணைக்கு உத்தரவு....

மும்பை:
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க தேவையில்லை என டெண்டுல்கர், கோலி, ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சாய்னா நேவால் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், லதா மங்கேஷ்கர் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான், கங்கனா ரணாவத் போன்ற திரைப்பிரபலங்களும்- குறிப்பிட்ட நேரத்தில் அடுத்தடுத்து ஒரே மாதிரியாக டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டனர்.இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் பாஜக இருக்கலாம் என்றும், அந்தக் கட்சிதான் விளையாட்டு மற்றும் திரைத்துறை பிரபலங்களை மிரட்டி டுவிட்டரில் விவசாயிகளுக்கு எதிராக கருத்துப் பதிவிட செய்திருக்கலாம் என்றும் பலர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே பிரபலங்கள் கருத்து பதிவிட்டார்களா? என்பது குறித்து உளவுத்துறை மூலம் விசாரிக்கப் போவதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவித்துள்ளார்.“சில பிரபலங்கள் டுவீட் செய்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. டுவீட்கள் பதிவான நேரம், ஒருங்கிணைந்த பாணி ஆகியவற்றை வைத்து பார்த்தால் இதெல்லாம் திட்டமிட்டது போல் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, மகாராஷ்டிர அரசின் இந்த விசாரணைக்கு, முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருதுபெற்ற லதா மங்கேஷ்கர், டெண்டுல்கரை விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர அரசுவெட்கப்பட வேண்டும்; என்று கொதித்துள்ளார்.