மும்பை:
மராத்தா சமூகத்தினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் பட்டது. இதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்றும் இடஒதுக்கீடு அளவைக் குறைத்து கல்வியில் 13சதவிகிதம் என்றும் வேலைவாய்ப்பில் 12 சதவிகிதம் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அதனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தநிலையில் மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில்இன்னமும் தெளிவு கிடைக்க வில்லை. அதுவரை அந்த சமூகம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு வழங்கப்படும். அந்த பிரிவின் கீழ் இவர்களுக்கு சலுகை வழங்கப்படும். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இனி மராத்தா சமுதாய மக்களும் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.