புதுதில்லி:
நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, தனியார் மயத்தை தீவிரப்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது இரண்டு பொதுத்துறை உர நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்பதென முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 1,500 கோடி நிதி கிடைக்கும் என்றும் அது கணக்குப் போட்டுள்ளது.
2020-21 நிதியாண்டில், கொரோனா காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு பொதுத்துறை பங்குகள் விற்பனையை மோடி அரசால் நடத்த முடியவில்லை. இதனால், 2021-22 நிதியாண்டிலாவது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதை, ஒன்றிய பாஜக அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கை விட ரூ. 38 ஆயிரம் கோடி அதிகமாகும்.பாரத் பெட்ரோலியம், ஏா் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, எல்ஐசி ஆகியவற்றின் பங்குகளை விற்றே தீருவது என்று முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், தனியாருக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில், ராஷ்ட்ரீய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனம் (Rashtriya Chemicals & Fertilizers - RCF), தேசிய உரங்கள் நிறுவனம் (National Fertilizers Limited - NFL) ஆகிய இரு பொதுத்துறை உர நிறுவனங்களையும் சேர்த்துள்ளது. மேலும், 2021 டிசம்பா் மாதத்திற்கு உள்ளாகவே பங்கு விற்பனையை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.ஆா்சிஎப் நிறுவனத்தில் ஒன்றிய அரசுக்கு 75 சதவிகிதப் பங்குகளும், என்எப்எல் நிறுவனத்தில் ஒன்றிய அரசுக்கு 74.71 சதவிகிதப் பங்குகளும் உள்ள நிலையில், இவற்றில், முறையே 10 மற்றும் 20 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி முதல் ரூ. ஆயிரத்து 500 கோடி வரை நிதி கிடைக்கும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு அதிகாரிகள், பங்குச் சந்தைகளில் இந்த விற்பனையைப் பட்டியலிடும் நடவடிக்கைக்காக ஏற்கெனவே வங்கிகள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மும்பை பங்குச் சந்தையில் ராஷ்ட்ரீய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தின் பங்கு விலை 72 ரூபாய் 25 காசுகளாகவும், தேசிய உரங்கள் நிறுவனப் பங்கின் விலை 53 ரூபாய் 95 காசுகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.