புதுதில்லி:
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை; விளைவித்த பயிரை அறுவடை செய்ய முடிமல் போனாலும், அதையும் தியாகம் செய்ய விவசாயிகள் தயார் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துஉள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், விளைந்த பயிர்களை அறுவடை செய்வதற்காக விவசாயிகள் போராட்டத்தை விட்டுவிட்டு கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என்று நம்புவதாகவும் மத்திய பாஜக அரசு கூறியிருந்தது.இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ராகேஷ் திகாயத் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
ஹரியானாவின் ஹிசாரில் உள்ள காரக் பூனியா கிராமத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது:“வேளாண் சாகுபடிகளுக்கு விலைகள் உயர்த்தப்படவில்லை, ஆனால் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் ஏற்றுகின்றனர். இப்படியே மத்திய அரசு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தால் நாங்கள் எங்கள் டிராக்டர்களை தேர்தல் களமான மேற்கு வங்கத்துக்கும் கொண்டு செல்வோம். ஏனெனில், அங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை.பயிர்களை (கோதுமை) அறுவடை செய்வதற்காக விவசாயிகள் கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என்று அரசு கூறுகிறது. அப்படி எந்தவொரு தவறான கண்ணோட்டத்தையும் மத்திய அரசு கொள்ள வேண்டாம். பண்ணைச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் யாரும் வீடு திரும்பப் போவதில்லை. எங்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினால் நாங்கள் பயிர்களை எரித்து விடவும்- பயிர்களை தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம். தேவைப்பட்டால் நீங்கள்(விவசாயிகள்) பயிரை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். உங்கள் பயிரை தீ வைக்க தயாராகுங்கள் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம்.எங்கள் போராட்டத்தின் மூலமாகநாட்டின் அரசியல் சூழலை மாற்றுவோம். மேற்குவங்க மாநிலத்தில் இதை அடுத்த ஒரு மாதத்தில் செய்து காட்டுவோம். உ.பி., தில்லி, ஹரியானா மாநிலங்களில் மட்டுமன்றி, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயிகள் மகா பஞ்சாயத்துகளை நடத்துவார்கள்.இவ்வாறு திகாயத் கூறியுள்ளார்.