india

img

வேளாண் சட்டங்களுக்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதும் ஜன.11-ல் விசாரணை... உச்சநீதிமன்றம்....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை . வேளாண் சட்டங்களுக்கு எதிரான அனைத்து மனுக்களையும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுவையும் ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்று  தெரிவித்தது.

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிர், கொட்டும் பனியை தாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய பாஜக அரசு பிடிவாதத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும்பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் விசாரணை நடத்திவருகிறது.கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க விவசாயிகள், அரசின் பிரதிநிதிகள் கொண்ட சார்பற்ற, சுயாட்சித் தன்மை கொண்ட குழுவை அமைத்துத் தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த மனு ஜனவரி 6 புதன்கிழமையன்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினர்.அப்போது கே.கே.வேணுகோபால் கூறுகையில், “மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஆரோக்கியமான சூழலில்தான் பேச்சுவார்த்தை நடக்கிறது. எதிர்காலத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கூறுகையில், “விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை எனப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்பதால் அதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்த மனுக்கள் அனைத்தையும் ஜனவரி 11 ஆம் தேதி மொத்தமாக விசாரிக்கிறோம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.