india

img

தலித் சிறுமி கும்பல் பாலியல் வன்புணர்வு எரித்துக் கொலை : நீதிமன்றத்தின் மேற்பார்வையில் புலன் விசாரணை மேற்கொள்க... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை...

புதுதில்லி:
தில்லியில். தலித் சிறுமி ஒருவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரத்தைச் செய்த கயவர்கள் மீது உறுதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் புலன்விசாரணைநடத்தப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரியஇழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியிருக்கிறது.இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் 1 அன்று தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் பழைய நங்கல் கிராமத்தில் ஒன்பதுவயது தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கயவர்களால் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டுள்ள கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது அறிந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொள்கிறது.

ஆகஸ்ட் 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தில்லி பொதுச்செயலாளர் ஆஷா ஷர்மா மற்றும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி தலைவர்நத்து பிரசாத் ஆகியோர் எரிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரைச் சந்தித்து, அவருக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்திற்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

தாயாரை மிரட்டிய பூசாரி...
எரிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தெருவில்குப்பை பொறுக்குபவர்கள். அவர்களுக்கு எப்போதாவது தூய்மைப் பணியாளர் வேலை கிடைத்திடும். இறந்த சிறுமியை அவருடைய தாயார் சுடுகாட்டில் உள்ள தொட்டியிலிருந்து தண்ணீர் பிடித்துவர அனுப்பியிருக்கிறார். அங்கே கிரிமினல்கள் அவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, பின்னர் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த பூசாரியின் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாகத் தகனம் செய்திருக்கின்றனர். அப்போதுதான் அவர்களுடைய கொடூரச் செயலை மறைத்திட முடியும் என அவர்கள் கருதியிருக்கின்றனர்.  இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் இறந்த சிறுமியின் பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தார்களுடன் சுடுகாட்டு மைதானத்திற்குச் சென்றிருக்கின்றனர். இறந்த சிறுமியின் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டது. அவருடைய கால்கள் மற்றும் காதுகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்தப் பூசாரி, இறந்த குழந்தையின் தாயாரின் சம்மதத்துடன்தான் எரித்ததாகக் கூறியிருப்பதாகும். இது வடிகட்டிய பொய்யாகும். ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில்இளம் பெண்கள் புதைக்கப்படுவார்களேயொழிய, எரிக்கப்பட மாட்டார்கள் என்பது மாதர் சங்கத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தப் பூசாரி இறந்த பெண்ணின் தாயாரிடம் இந்தக் குற்றச்சம்பவம் குறித்து எவரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார் அத்துடன் அந்தப் பெண் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாகி இறந்துவிட்டார் என்றும் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மிரட்டல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தில்லிக்காவல்துறை, இறந்த சிறுமியின் பெற்றோரைகாவல்நிலையத்திலேயே அடைத்து வைத்திருந்து, முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மாறாகக் குற்றமிழைத்த கயவர்களைக் கைதுசெய்வதற்குப் பதிலாக சுதந்திரமாக விட்டிருக்கிறது. அருவருப்பான இந்த சம்பவம் குறித்துமூடிமறைக்கவே முயற்சி செய்திருக்கிறது. கிராமத்தார்கள் நிர்ப்பந்தம் அளிக்கும்வரையிலும் குற்றமிழைத்த நால்வர் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுத்திருக்கிறது. காவல்துறையினர் கயவர்களைக் காப்பாற்றவே முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கைகளின்படி அந்தச் சிறுமி ‘பாலியல்ரீதியாகத் தாக்கப்பட்டாரா’ ‘இல்லையா’ என நிர்ணயிப்பது கடினம் என்று கூறியிருப்பதாக ஊடகங்களின் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் ஆட்களிடமிருந்து பெற்ற அறிக்கைகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை போக்சோ,தலித்/பழங்குடியினர் சட்டப்பிரிவுகளின்படியும் மற்றும் ஆழமான குற்றங்களின் கீழும்  வழக்குகள்பதிவு செய்யப்படவில்லை என்று காட்டுகின்றன.இப்போது பொது மக்களின் மத்தியிலிருந்து நிர்ப்பந்தம் வந்திருப்பதன் காரணமாகவும், தொடர்ந்து கிளர்ச்சிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதாலும் இது தொடர்பான புலன்விசாரணை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

அமித்ஷாவின் அமைதிக்கு கண்டனம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்த வழக்கில் இதுவரையிலும் தில்லிக்காவல்துறையினர் மேற்கொண்டிருக்கும் செயல்பாடு முழுவதையும் கண்டிக்கிறது. அதேபோன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமைதியாக இருப்பதையும் கண்டிக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் அரசியலாக்கப்படுகிறது என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு விரைவாக நீதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் ஒலிபரப்பு அமைச்சரின் பொய்யான மற்றும் கூருணர்வற்ற அறிக்கையையும் கண்டிக்கிறது.  

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மோடி அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துக்கொண்டிருக்கும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை மேற்கொள்ள சபதம் ஏற்கிறது.
ஹத்ராஸ் மற்றும் இதர பாலியல் வழக்குகளைப்போலவே இந்தக் கொடுமையும் நடந்திருப்பதால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண்களுக்கெதிரான வன்புணர்வுகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்திருப்பதற்கு ஒன்றிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகிறது.

நீதிமன்ற மேற்பார்வையில்...

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கீழ்க்கண்ட நான்கு நடவடிக்கைகளையும்  கோருகிறது:

(1) இந்த வழக்கு தொடர்பாக ஒரு விரைவு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற புலன்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(2) குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்புணர்வு, கொலை மற்றும் போக்சோ மற்றும்தலித்/பழங்குடியினர் சட்டங்களின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(3) தில்லிக் காவல்துறையினரின் செயல்பாடு குறித்து முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் குற்றத்துடன் அமைதியானமுறையில் உடந்தையாக இருந்தமை தொடர்பாக அவர்கள் பதில்சொல்லியாக வேண்டும்.

குடும்பத்துக்கு பாதுகாப்பு

(4)  தில்லி அரசாங்கம் அக்குடும்பத்தினருக்கு அற்பத்தொகையாக பத்து லட்சம் ரூபாய்இழப்பீடாக அறிவித்திருக்கிறது. இது அவர்களுடைய புனர்நிர்மாணத்திற்கு உதவுவதற்கேற்ற விதத்தில் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்.கூடுதலாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.நீதிக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்காகஅவர்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் இதரஉதவிகள் அளித்திட வேண்டும்.இவ்வாறு மாலினி பட்டாச்சார்யா, மரியம் தாவ்லே அறிக்கையில் கோரியுள்ளார்கள்.