புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதல் வர்களுடன் பிரதமர் மோடி ஜூலை16 அன்று தில்லியில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளி்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 23,000 கோடி அவசரகால நிதியை ஒன்றியஅரசு ஒதுக்கியுள்ளது. மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த தொகுப்பிலிருந்து வரும் நிதியை பயன் படுத்த வேண்டும்.நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றபோதிலும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக உள்ளது. கடந்த சில நாட்களாக 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீதம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். எனவே இதன் பாதிப்பு 3-வது அலையை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது. கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். 6 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும். இதற்கான திட்டமிடல் மிகவும் அவசியம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.