india

img

கார்ப்பரேட்களுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் வர்க்கப் போராட்டம்... தில்லி ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் முழக்கம்....

புதுதில்லி:
தில்லியில் கடந்த 8 மாதகாலமாக நடைபெற்று வரும் போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும்வர்க்கப் போராட்டம் என்று தில்லி ஆர்ப்பாட்ட த்தில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரியும் தில்லியில் கடந்த 8 மாதகாலமாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தில் பங்கேற்கவும் தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் கடந்த 3ஆம் தேதி புறப்பட்டு தில்லி சென்றனர். 5ஆம் தேதி (வியாழன்)  காலைதில்லி ரயில் நிலையம் வந்திறங்கிய விவசாயி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன் ஆகியோர் வரவேற்றனர்.

சுற்றிவளைத்த காவல்துறை 
பின்னர் அங்கிருந்து போராட்டம் நடைபெறும் தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி  விவசாயிகள் பேரணியாகப்  புறப்பட்டனர். பேரணியில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவலே, பொதுச் செயலாளர்  ஹன்னன்முல்லா ,  நிதி செயலாளர் கிருஷ்ணபிரசாத், சங்கத்தின் அகில இந்திய நிர்வாகிகள் விஜூ கிருஷ்ணன், விக்ரம் சிங், சிஐடியு செயலாளர் கருமலையான் ஆகியோர் அணிவகுத்து வந்தனர். பேரணி சிறிது தூரம் சென்றதும்காவல் துறையினர் மடக்கி ஜந்தர் மந்தர் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி கைதுசெய்தனர். பின்னர் தில்லியின் புறநகர்ப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் சிங்குவுக்கு அரை கி.மீ. தூரத்திலேயே இறக்கிவிடப்பட்டனர்.\

கார்ப்பரேட் நிறுவனங்கள்
தமிழக விவசாயிகளுடன் தில்லி சென்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போராட்டத்தை வாழ்த்திப் பேசுகையில், 3 வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயம் என்பது அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சென்று விடும். எந்த பொருட்களுக்கும் நியாயமான விலையைக் கோர முடியாது. அரசு விவசாயத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி விடும். விவசாயத்தை குறித்து மக்களவையில் விவாதிக்க முடியாது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யாது, கொள்முதல் செய்யாது. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வார்கள். 

வர்க்கப் போராட்டம் 
எனவேதான் இந்த சட்டத்தை எதிர்த்து தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தா மல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் விவசாயிகளுக்கும் மோடி அரசுக்குமான போராட்டம் மட்டுமல்ல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் வர்க்கப் போராட்டமாகும். நாட்டில் கார்ப்பரேட்டுகள் இருக்க வேண்டுமா அல்லது ஏழை விவசாயிகள் இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. கார்ப்பரேட் கையில் விவசாயத்தை ஒப்படைத்து விட்டு விவசாயிகள் திருவோடு ஏந்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார்.நாட்டில் ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை நமது போராட்டம் தொடரும். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளையும், மலைவாழ் மக்களையும், கரும்பு விவசாயி களையும், பெண்களையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்றார். 

கொடூர ஆட்சி
கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்திப் பேசுகையில், தமிழக விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அணி திரட்டிய விவசாய சங்கத்தைப் பாராட்டுகிறோம். இந்திய மக்களுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார மசோதா, ட்டுக்கேட்பு போன்றமோசமான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.இந்த கொடூர ஆட்சிக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு வணிகர்கள், சிறு குறு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்டி போராட வேண்டும். விவசாயிகளின் இந்த ஒற்றுமையையும் போராட்ட உணர்வையும் பாராட்டுகிறேன் என்றார்.

இறங்கிவந்துள்ள பாஜக அரசு 
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், இந்தியவரலாற்றில் இல்லாத வகையில், சுதந்திரத்திற்கு பிறகு யாராலும் நடத்த முடியாத ஒரு போராட்டத்தை இந்திய விவசாய வர்க்கம் கடந்த 8 மாதகாலமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தை இயற்றியவர்களே இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். வேளாண் சட்டம் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் பேசவே மாட்டோம் என்று கூறியஅரசு தற்போது வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசுவோம் என்ற அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார்கள். வெயிலையும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக விவசாயிகள் நடத்திவரும்  ஒன்றுபட்ட போராட்டம்தான் அதற்கு காரணம்.

உறுதிமிக்க போராட்டம் 
யமுனையின் வெள்ளப்பெருக்கில் ஆயிரமாயிரம் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் யமுனையின் வெள்ளப் பெருக்கு விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தை எதுவும்செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 3 வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் போராட்டத்தில் செங்கொடி இயக்கமும், விவசாயிகள் சங்கமும், இந்திய விவசாயிகளும் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் இருந்து பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

கொள்ளையர்களுக்கு எதிரான போராட்டம்
சிவதாசன் எம்பி. பேசுகையில், தில்லியில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல  இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரானதாகும் என்று குற்றம்சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோர ரூபாய் கடன் தள்ளுபடி அளிக்கும் மோடி அரசுக்கு சாமானிய ஏழை விவசாயிகளைப் பற்றி கவலை இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கூடகொடுக்க வக்கில்லாத மோடி அரசைநாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் விவசாயி களோடு கரும்பு, முந்திரி காப்பிக்கொட்டை விவசாயிகள் என பலதரப்பட்ட விவசாயிகளும் இணைந்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் மகத்தான முழக்கமாக விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கோஷத்தில் நாம் ஒன்றிணைந்து மோடி அரசை வீழ்த்துவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.இந்திய ஒன்றியத்தின் பண்பாட்டைச் சீரழிக்கும் மோடி அரசின்மூன்று மசோதாக்களை வெறும் 3 மணிநேர விவாதத்தில் மக்களவையில் நிறைவேற்றிய வெட்கக்கேடு நடந்தேறி யுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும்  சர்வாதிகாரமும் நடந்தேறியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து களம் காண விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் என சிவதாசன் எம்பி  கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை மனு அளிப்பு
முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஹன்னன்முல்லா   தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்முடிவில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று கோரிக்கை  மனு அளித்தனர்.

படம், செய்தி : ம.மீ.ஜாபர்

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 8-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.