india

img

கோவிட் எச்சரிக்கைகளை புறக்கணித்தது மத்திய அரசு.... 15 மாதங்கள் இருந்த போதும் முன்னெச்சரிக்கை இல்லை.... மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டும் சர்வதேச ஊடகங்கள்......

புதுதில்லி:
கோவிட்டின் அதிதீவிரமான இரண்டாவது தொற்றுக்கு வழிவகுத்தது மோடி அரசாங்கத்தின் கவனக்குறைவும் அலட்சியமும்தான் காரணம் என பல்வேறு சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன. கோவிட் எச்சரிக்கைகளை புறக்கணித்த மத்திய அரசு, 15 மாதங்கள் இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவை மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டியுள்ளன.

கடுமையான ஆபத்துகள் குறித்த அரசாங்க எச்சரிக்கைகளைக் கூட மோடி புறக்கணித்துள்ளார். கோவிட் இரண்டாம் அலையின் தீவிரம் குறித்து மார்ச் மாத தொடக்கத்தில், அரசு நிறுவனமான ‘இந்தியாஸ் சார்ஸ் கோவ் - 2 ஜீனோம் சீக்வென்சிங் கன்சோர்டியம் (இன்சாகோக்)’ எச்சரித்தது. ஆனால், அதற்கு மதிப்பளிக்காமல் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் கும்பமேளாவிற்கும் மத்திய அரசு  முக்கியத்துவம் அளித்தது. நிலைமை கைமீறிச் செல்ல காரணமான மோடி அரசின் அலட்சியத்தை சர்வதேச மருத்துவ இதழ் ‘லான்செட்’ உள்ளிட்டவை பட்டியலிட்டுள்ளன.

இன்சாகோக், மார்ச் முதல் வாரத்தில் வழங்கிய எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்ததாக முதலில் தெரிவித்தது சர்வதேச ஊடகமான ராய்டர்ஸ். இன்சாகோக்கின் ஒரு பகுதியாக இருக்கும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) இயக்குநர் டாக்டர். சுஜித் குமார் சிங், ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா அதை உறுதிப்படுத்தினார். இன்சாகோக் என்பது 10 அரசு ஆய்வகங்களின் கூட்டமைப்பு ஆகும். கோவிட்டின் மரபணு மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் குழு, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரசாங்கத்திற்கு அறிக்கை அளிக்கிறது. மார்ச் மாத தொடக்கத்தில் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. முதல் அறிகுறிகளை மத்திய அரசு  புறக்கணித்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்தார்.

நிபுணர்களின் மதிப்பீடுகளுடன், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய விமர்சனங்களும் மோடி அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது. கோவிட் தொற்று பரவத் தொடங்கி 15 மாதங்களுக்குப் பிறகும் அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதில் மத்திய அரசு தோல்வி கண்டிருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசின் அலட்சியம் அம்பலமானதும், உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலையீடுகளாலும் மத்திய அரசு பின்னடைவை சந்தித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு கிடைத்துள்ள ஒரு அடியாகும். உலகளாவிய தடுப்பூசி விசயத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையில் கிடைக்கும் தடுப்பூசி, அதைவிட பத்து மடங்கு விலையில் மாநிலங்களுக்கு ஒப்படைக்கப்படும் என்கிற கொள்கை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

முட்டுக்கொடுக்கும் ஆர்எஸ்எஸ்
மோடி அரசுக்கு எதிரான விமர்சனங்களின் சூடு சங் பரிவாரையும் எட்டியுள்ளது. மத்திய அரசை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வில் வலுவடைந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அரசாங்கத்திற்கு எதிரான உணர்வைத் தூண்டுவதற்கு ‘இந்திய எதிர்ப்பு’ சக்திகள் கோவிட் நிலைமையைப் பயன்படுத்துவதாகக் கூறி தற்காப்பு தந்திரங்களை ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுள்ளது. ‘பாசிட்டிவிட்டி அன்லிமிடெட்’ என்கிற தலைப்பில் நான்கு நாள் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மே 14 ஆம் தேதி முதல் உரை நிகழ்த்துவார். அசிம் பிரேம்ஜி, சுதா மூர்த்தி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கேற்பார்கள். அரசின் மீதான களங்கம் போக்குவதற்கான ஆர்எஸ்எஸ் கும்பலின் கடைசி முயற்சி இது ஆகும்.