india

img

முஸ்லீம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா அரசு - இளமறம் கரீம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று முத்தலாக் சட்டமுன்வடிவு என்கிற 2019ஆம் ஆண்டு முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு (The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019) மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று இளமறம் கரீம் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்க்கிறேன். இது ஒன்றும் முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப்  பாதுகாப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, நாட்டிலுள்ள மிகப்பெரிய அளவிலான சிறுபான்மை இனத்தவர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடிய ஒன்றாகும். எங்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘தலாக்’ கூறுவதை, குறிப்பாக ‘முத்தலாக்’ கூறுவதை எதிர்க்கிறது. இத்தகைய நடைமுறை இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கோரிக்கையை ஏற்பது என்பது, இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தைக் கொண்டுவரும். அதே சமயத்தில், பெரும்பான்மை இனத்தவர்க்கான ‘பர்சனல்’ சட்டங்களும், (personal laws) சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்தச் சட்டமுன்வடிவானது, இந்தச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, நன்கு நிறுவப்பட்ட அரசமைப்புச்சட்ட நடைமுறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் எதிரானதுமாகும். இந்தச் சட்டமுன்வடிவு, “அவசியத்தின் அடிப்படையில்” (“on the basis of necessity”) எனத் தொடங்குகிறது. அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது, “அவசரத்தின் அடிப்படையில்” (“on the basis of urgency”) என்று தொடங்கியது. இங்கே, இந்தச் சட்டமுன்வடிவைப் பொறுத்தவரை இதுபோன்று எவ்விதமான கோரிக்கையும் எழவில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றம், ஏற்கனவே முத்தலாக் கூறுவதை சட்டப்படி முற்றும் செல்லாது என்று அறிவித்து அதனை அடித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதித்தீர்ப்பு என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். முத்தலாக் கூறுவது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும்போது,  நம் நாட்டில் இதுதொடர்பாக நடப்பில் உள்ள சட்டத்தின்படியும் இது சட்டவிரோதமாகும் என்றே கருதப்பட வேண்டும். பின், இதுபோன்றதொரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இதற்குக் காரணம், நம் சமூகத்தில் ஒரேமாதிரியான ஒரே சீரான குடிமைச் சட்டத்தைத் திணித்திட வேண்டும் என்கிற இந்த அரசாங்கத்தின் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலைத் தவிர வேறெந்தக் காரணமும் கிடையாது.

இச்சட்டமுன்வடிவு குறித்து என் முதல் கூற்று, இது இயற்கையாகவே பாகுபாடுடன் கூடிய ஒன்று. இது, நாட்டிலுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (code of Criminal Procedure) கீழான வழக்குகளுடன் இதனைப் பிணைக்கிறது. நாட்டில் மற்ற மதங்களின் கீழான திருமணச் சட்டங்கள் அனைத்துமே குடிமை இயல் சட்டத்தின் (Code of Civil Procedure), கீழான வழக்குகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் தண்டனைப் பிரிவுகள் என்பவை மிகவும் எளிதானவைகளாகும்.

மாண்பமை உச்சநீதிமன்றம், தன்னுடைய சாயா பானு (எதிர்) மத்திய அரசு மற்றும் ஒருவர் என்னும் வழக்கில், முத்தலக் கூறும் நடைமுறையை, செல்லாது என்று கூறி, தன்னுடைய பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்மூலம் 2017 ஆகஸ்டில் முத்தலக் என்று கூறுவதை செல்லாததாக்கி இருக்கிறது. அந்தத் தீர்ப்புரையில் முத்தலாக் என்று கூறுவது செல்லத்தக்கதல்ல, அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது, பாகுபாடுடன் கூடியது, இஸ்லாமிய விரோதமானது (un-Islamic) என்று குறிப்பிட்டுள்ளது. காரணம், இந்த நடைமுறை இதனால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு எவ்விதமான வாய்ப்பையும் அளிக்காது மணமுறிவை ஏற்படுத்திக்கொள்ள ஆணுக்கு வகை செய்கிறது. இவ்வாறு கூறித்தான் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பினைப் பகர்ந்தது. ஆனால், இந்த அரசாங்கம், இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் என்பதன் கீழ், உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, கொண்டு வருவதாகக் கூறியிருப்பதைப் பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. உச்சநீதிமன்றம், தன்னுயை 300 பக்க தீர்ப்புரையில், எந்த இடத்திலும் முத்தலாக் கூறுவதை கிரிமினல் குற்றமாகக் கருதிட வேண்டும் என்று கூறவே இல்லை.

இந்த அரசாங்கம், முஸ்லீம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என நான் அறிய விரும்புகிறேன். எனக்குக் கிடைத்துள்ள தரவுகளின்படி, முஸ்லீம் பெண்களின் வேலை வாய்ப்பு சதவீதம் என்பது நாட்டில் வெறும் 14.1 சதவீதமேயாகும். அதாவது, நாட்டிலுள்ள அனைத்து சமூக-மத இனங்களின் மத்தியில் மிகவும் குறைவான ஒன்றாக இது இருக்கிறது. முஸ்லீம் பெண்களின் கல்வியறிவு விகிதம் (literacy rate) என்பது 50.1 சதவீதம். இதுவும் இதர இனத்தவர்களை விட மிகவும் குறைவாகும். பள்ளி இறுதிவரை படிக்கும் முஸ்லீம் பெண்களின் விகிதம், தலித் மற்றும் பழங்குடியினத் தவர்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லீம் பெண்களின் மீது உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இப்பிரச்சனைகளைத் தீர்த்திட உரிய நடவடிக்கைகளை அது எடுத்திட வேண்டும்.

அரசமைப்புச்சட்டத்தின் 141ஆவது பிரிவின்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் சட்டமாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறு நிலைமை இருக்கும்போது, இந்த அரசாங்கம் ஏன், இத்தகைய பிரச்சனைக்குரிய சட்டத்தைக் கொண்டுவர அவசரப்படுகிறது?

நாட்டிலுள்ள பர்சனல் சட்டங்கள் (Personal Law) அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவின்கீழ் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. அதாவது, மதம், திருமணம், மணமுறிவு, பாரம்பர்யச் சொத்து உரிமை மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்துப் பேணுதல் போன்றவற்றிற்கு சுதந்திரம் அளிக்கிறது. இவை ‘பர்சனல்’ சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாகும். இதில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது.

இந்தச் சட்டமுன்வடிவு அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாகும். இழிநோக்கத்துடன் கொண்டுவரப் பட்டிருப்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடிய ஒன்றாகும்.

இந்தச் சட்டமுன்வடிவின் பின்னே இந்த அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல் இருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, மக்களின் மதச் சுதந்திரம், ஒவ்வொரு மதத்தினரும் மேற்கொள்ளும் நடைமுறைகள் மீதான சுதந்திரம் ஆகியவற்றின்மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மட்டுமல்லாமல், இறுதியில் நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சீரான குடிமைச் சட்டத்தை (common civil code) கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் தவிர வேறல்ல.

ஆளும்கட்சித்தரப்பினருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தேர்தலில் ஒரு தோல்வி அல்லது ஒரு வெற்றி என்பதே வரலாற்றின் இறுதி என்பது கிடையாது. மே 23 என்பதுடன் இந்திய வரலாறு முடிந்து விடாது.

இவ்வாறு இளமறம் கரீம் கூறினார்.

(ந.நி.)

 

;