india

img

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

புதுதில்லி, ஜுன் 05 - 18ஆவது மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர உள்ளார் நரேந்திர மோடி.  

ஜூன் 8 அன்று கூட்டணிக் கட்சிகள் ஆத ரவுடன் பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, புதனன்று மாலை 17ஆவது மக்களவையைக் கலைப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தையும் தமது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மோடி அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவையும் ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை இடைக்காலப் பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

பாஜக எம்பிக்கள் தில்லி வர உத்தரவு

பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதனன்று நடைபெற்ற நிலையில், வியாழனன்று, 18ஆவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் அனைவரும் தில்லி வர வேண்டும் என பாஜக தேசியத் தலைமை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் வியாழனன்று நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிதின் கட்காரியை பிரதமராக்க நாக்பூரில் பாஜகவினர் போராட்டம்

பாஜகவின் மூத்த தலைவரும், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்கமானவருமான நிதின் கட்காரி 17ஆவது மக்களவை அரசாங்கத்தில் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில், மோடிக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், மோடியால் பாஜக பெரும்பான்மை இழந்துவிட்டது; அதனால் நிதின் கட்காரியை பிரதமராக்க வேண்டும் எனக் கூறி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாக்பூர் நகரின் பெரும்பாலான இடங்களில் மோடிக்கு எதிராகவும், நிதின் கட்காரிக்கு ஆதரவாக பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

;