india

img

நாம் வெல்வது உறுதி...

நரேந்திரமோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி நவம்பர் 30 திங்களன்று 5 ஆவது நாளை எட்டியது.போராட்டக் களத்திலிருந்து விரிவான விபரங்களை தேசிய ஊடகங்கள் எனக் கூறப்படும் பெரும் கார்ப்பரேட் மீடியாக்கள் தர மறுத்த போதிலும், லட்சக்கணக்கில் தொடர்ந்து தில்லியை நோக்கி வந்த வண்ணம் இருக்கும் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் முகநூல் பக்கங்கள், நியூஸ் கிளிக் மற்றும் தி வயர் இணைய இதழ்களின் செய்தியாளர்கள் தரும் தகவல்கள் உள்பட பல்வேறு தளங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை மெய்ச்சிலிர்க்க செய்கின்றன. விவசாயிகள் எழுச்சிக்கு ஆதரவாக உத்வேகத்துடன் களமிறங்கச் செய்கின்றன.

1.இந்த மாபெரும் எழுச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பிரதான விவசாயிகள் சங்கங்களின் தலைமையில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்துள்ளன. “சம்யுக்த கிஷான் மோர்ச்சா” - ‘ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை’ என்பதே பிரதான முழக்கமாக மாறியுள்ளது.

2.ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தின் பிரதான பகுதி பஞ்சாப்பிலிருந்து தில்லிக்கும், ஹரியானாவிலிருந்து தில்லிக்கும் நுழைகிற முதன்மை எல்லைச் சாலைகளான திக்ரி மற்றும் சிங்கு ஆகிய இடங்கள் ஆகும். இந்த இரண்டு சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாயிகளும், டிராக்டர்களும் மட்டுமே. எத்தனை லட்சம் பேர் என்று எண்ணுவது கடினம்.

3.பஞ்சாப்பிலிருந்து மட்டும்தான் விவசாயிகள் தில்லியை நோக்கி வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என சில கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் உண்மையில் மேற்கண்ட எல்லைகள் தவிர, உத்தரப்பிரதேசம்- தில்லி எல்லையான காஸிபூர் எல்லைச் சாலை முழுவதும் விவசாயிகளால் நிரம்பி வழிகிறது.

4.ஏற்கெனவே நவம்பர் 27 அன்று காவல்துறையின் தடுப்பரண்களையெல்லாம் உடைத்து கொண்டு தில்லிக்குள் நுழைந்துவிட்ட விவசாயிகள், தில்லி மாநகரின் எல்லையான காஸியாபாத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டு அமர்ந்திருக்கிறார்கள்.

5.இதுதவிர ஏற்கெனவே, நவம்பர் 26 - 27 தேதிகளில், தில்லிக்குள் நுழைந்து, விவசாயிகள் போராடுவதற்காக என்று கூறி மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட தில்லி புராரி பகுதியில் உள்ள நரகாரி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

6.போராடும் விவசாயிகள் தில்லி புராரி மைதானத்திற்கு, எந்தப் பிரச்சனையும் செய்யாமல் போய்விட்டால் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று நவம்பர் 28 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். ஆனால் மறுநாள் நவம்பர் 29 அன்று, போராட்டத்திற்கு ஏற்றுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்பட பிரதானமான 30 சங்கங்களின் தலைவர்கள் சிங்கு எல்லையில் கூடி பேசினார்கள். இந்த சந்திப்பின் முடிவில், போராட்டம் துவங்கிய பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ‘புராரி மைதானத்திற்கு வர சொல்வது என்பதே அங்கு எல்லோரையும் சிறைவைத்து அதை ஒரு திறந்தவழி சிறைச்சாலையாக மாற்றுவதுதான்; மோடி - அமித்ஷாவின் சதிராட்டங்களை அறியாதவர்கள் அல்ல நாங்கள்; எந்த நிபந்தனையும் கூடாது; ஒரே முழக்கம் வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்’ என்பதுதான் என திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

7. 5 நாட்களாக தூக்கத்தை தொலைத்து நிற்கும் மோடி அரசு, வேறுவழியின்றி நவம்பர் 30 திங்களன்று நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

8.ஹரியானாவிலிருந்து ஒரு விவசாயி கூட பங்கேற்கவில்லை என்று அந்த மாநில பாஜக அரசின் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஊடகங்களில் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அதேவேளையில் அவருக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக, தில்லியில் உச்சநீதிமன்றத்தின் முன்பு தில்லி பார் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினார்கள்; பார் கவுன்சில் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான எச்.எஸ்.பூக்லா, ஹரியானா முதலமைச்சர் முட்டாள்தனமாக உளறிக் கொட்டுகிறார், சிங்கு எல்லையில் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை டிராக்டர்களை நிறுத்தி உட்கார்ந்து கொண்டிருப்பது எங்களது ரத்த சொந்தங்களான ஹரியானா விவசாயிகள்தான் என ஆவேசமாக கூறினார்.

9.ஹரியானா முதல்வரின் பேட்டியை திரும்ப திரும்ப ஒளிபரப்பிய கார்ப்பரேட் ஊடக குப்பையான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து மட்டும்தான் சில விவசாயிகள் வந்திருக்கிறார்கள் என பிதற்றிக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய வடமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் எல்லைகளில் குவிந்திருக்கிறார்கள். இன்னும் ஆயிரமாயிரமாய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா. கோவிட் 19 காரணமாக உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தென்மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தில்லிக்கு வர இயலவில்லை என்கிறார் அவர்.

10.ஹரியானாவில் எல்லா கிராமங்களிலும் சாதிய கட்டமைப்பை வலுவாக வைத்திருக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. இந்த கட்டப்பஞ்சாயத்துக்களை பயன்படுத்திதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்போது கட்டப் பஞ்சாயத்துக்கள் பாஜக ஆட்சிக்கு எதிராக திரும்பியிருக்கிறது. காரணம் என்னவென்றால், இவர்கள் எல்லோரும் விவசாயிகள். இப்போதுதான் அவர்கள் தங்களை விவசாய வர்க்கத்தின் ஒரு பகுதியாக உணர துவங்கியிருக்கிறார்கள். விவசாயம் செய்யும் தங்களது உரிமையே பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஹரியானாவின் ஒவ்வொரு கிராம கட்டப் பஞ்சாயத்தும், விவசாயிகள் முழுமையாக தில்லியை நோக்கி செல்ல வேண்டுமென்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11.உத்தரப்பிரதேச விவசாயிகளை தில்லிக்கு செல்லவிடாமல் தடுத்து விடலாம் என்று யோகி அரசு அடக்குமுறைகளை ஏவி பார்த்தது. ஆனால் மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து கரும்பு விவசாயிகள் சாரைசாரையாக தில்லியை நோக்கி அணிவகுப்பார்கள் என்று யோகி அரசு கனவிலும் நினைத்திருக்காது.

12.போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஓரிரு நாட்களில் தில்லியை நோக்கிச் செல்லும் இதர பிரதான சாலைகளான சோனிபட், ரோதக், ஹாப்பூர், ஜெய்ப்பூர், ஆக்ரா ஆகிய அனைத்தும் லட்சக்கணக்கான விவசாயிகளால் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13.சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் ருசிகரமான பல நிகழ்வுகளும், சம்பவங்களும் உற்சாகமூட்டுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடுத்தர வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய பெருங்குடிகளுக்கு இணையாக ஆயிரமாயிரமாய் சின்னஞ்சிறு இளவட்டங்கள் குவிந்திருக்கிறார்கள். 15 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களே எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

14.எல்லா இடங்களிலும் உள்ளூர் மக்கள், விவசாயிகளோடு இரண்டற கலந்துவிட்டார்கள். உணவு சமைப்பது, பரிமாறுவது, பம்ப் செட்டுகளிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது என இரவு பகலுமாக வேலைகள் ஜரூராக நடந்தவண்ணம் உள்ளன.

15.ஏராளமான டாக்டர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். வயதான விவசாயிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். இலவசமாக மருந்துகளை கொடுக்க துவங்கியிருக்கிறார்கள்.

16.சிங்கு எல்லையில் நவம்பர் 27 அன்று போலீஸ் தடுத்த போது இளைஞர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போதுதான் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதலில் போலீஸ் ஈடுபட்டது. அதற்குப் பிறகு விவசாயிகள், தடுப்பரண்களை எடுத்து தாங்களே ஒரு கோடு போட்டு தடுப்பை அமைத்துவிட்டார்கள். பின்னர், இந்த தடுப்பு, நீங்கள் எங்களுக்கு போட்டதல்ல. நாங்கள் உங்களுக்கு போட்டது. இதை தாண்டி வந்துவிடாதீர்கள், நிலைமை சிக்கலாகிவிடும் என்று போலீசுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டார்கள். இப்போது சிங்கு எல்லையில் போலீஸ்காரர்கள், பஞ்சாபி ரொட்டியை ரோட்டில் அமர்ந்தே சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

16.போராட்டம் பல நாட்களுக்கு தொடர்வது உறுதி என்ற நிலையில், ஞாயிறன்று இரவு சுமார் 20 டிரக்குகளில் கோதுமையும் தானியங்களும் வந்து சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் இறங்கியிருக்கின்றன. தேசத்திற்கே உணவளிக்கும் பாஞ்சலத்து விவசாயிகள் மூன்று நேரமும் சாலையில் அமர்ந்து உணவருந்தி கொண்டே கோஷம் போடுகிறார்கள். அருகில் உள்ள கிராமத்து மக்களுக்கும் தாராளமாக ரொட்டி கிடைக்கிறது. கிராமத்து மக்கள் பதிலுக்கு இவர்களுடன் இணைந்து ரொட்டி சுடுவதும், கோஷம் போடுவதுமாக இவர்களோடு ஐக்கியமாகிவிட்டார்கள்.

18.பஞ்சாப்பில் சமுதாய சமையல் கூடங்கள் பிரபலமானவை. ‘லேங்கர்’ என்று இதை சொல்வார்கள். சிங்கு, திக்ரி சாலை நெடுகிலும் ஏராளமான லேங்கர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப்பின் மொகாலியிலிருந்து, அம்பாலாவிலிருந்து, மோகாவிலிருந்து - என உணவுப் பொருட்களோடு இன்னும் பல டிராக்டர்கள் கிளம்பியிருக்கின்றன.

19.தில்லி நகரிலிருந்தும் நான்கு திசைகளிலும் தில்லிக்குள் நுழைவதற்காக முற்றுகையிட்டிருக்கிற விவசாயிகளுக்கு குருத்வாரா பங்ளா சாகிப்பிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இது தில்லியில் உள்ள சீக்கிய மக்களின் முதன்மையான குருத்வாராக்களில் ஒன்றாகும். இவர்கள் தவிர சர்வதேச அளவில் சீக்கிய மக்களின் அறக்கட்டளையாக செயல்பட்டு வரும் ‘யுனைடெட் சிக்ஸ்’ (ஒன்றுபட்ட சீக்கியர்கள்) அமைப்பின் சார்பிலும் உணவு, குளிர்தாங்கும் உடைகள் என ஏராளமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளை வந்தடைந்துள்ளன. மேலும் ஹரியானா விவசாயிகளது குடும்பங்களிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் வந்த வண்ணமிருக்கிறது.

20.‘கார்ப்பரேட் குப்பை’ ரிபப்ளிக் டிவி மற்றுமொரு அவதூறை பரப்பியது. போராடும் விவசாயிகளை என்ஜிஓக்கள் இயக்குகிறார்கள் என்றும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்றும் மோடி அரசின் கருத்தை வாந்தி எடுத்தது. ஆனால் ஹன்னன் முல்லா பதிலடி கொடுக்கிறார்: “செப்டம்பரில் இந்த போராட்டம் - தில்லியை முற்றுகையிடுங்கள் - என்று அறிவிக்கப்பட்ட உடனே பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும், உ.பி., ம.பி. மாநிலங்களின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.100 முதல் ரூ.500 வரை போராட்ட நிதி அளித்திருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் கோதுமை, அரிசியும், காய்கறிகளும் போராட்ட தானமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவசாயிகளுக்கு இப்போது சாதியில்லை, மதமில்லை. நெஞ்சில் விவசாயி என்ற உணர்வும், தனது கலப்பையை கைவிட்டுவிடக் கூடாது என்று வேட்கையும், அதை பறிக்க முயற்சிக்கும் மதவெறி - கார்ப்பரேட் மோடி அரசை விட்டுவிடவே கூடாது என்ற ஆவேசமும் மட்டுமே இருக்கிறது. நாங்கள் வெல்வது உறுதி!

படக்குறிப்பு  : திக்ரி எல்லையிலிருந்து சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தேசிய செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் அளித்த சில தகவல்களையும் இணைத்து...

தொகுப்பு: எஸ்.பி.ராஜேந்திரன்

;