புதுதில்லி:
மக்களுக்கு விரோதமான மத்திய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகள், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் அரசு மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக எழுந்துள்ள கொந்தளிப்புகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்ற அச்சத்தால் கொரோனாவைக் காரணம்காட்டி குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி, 8 நாட்கள் மட்டுமே நடைபெற்று நிறைவடைந்தது. வழக்கமாக குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ ஆரம்பிக்கும். கடந்த 20 நாட்களாக மத்திய பாஜகஅரசு கொண்டு வந்த மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராக தில்லி மாநில எல்லைகளை முற்றுகையிட்டு, பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல், பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவைகாங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி வலியுறுத்தினார்.இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த பேட்டியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளதாகவும், இதுபற்றி நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைக் குழுதான் முடிவுசெய்ய வேண்டும் என்றும்தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் மூலம் அளித்துள்ள பதிலில், இந்தமுறை நாடாளுமன்றக் குளிர்காலகூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவ தாகவும் நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். “தற்போது, டிசம்பர் நடுப்பகுதியில் இருக்கிறோம். கொரோனா தடுப்பூசிமிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து , நான் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்கள் தொற்றுநோய் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் குளிர்கால அமர்வைத் தவிர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர்” என்று நாளிதழ்ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர்பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.மக்கள் மற்றும் விவசாயிகளிடம் எழுந்துள்ள அரசுக்கு எதிரான கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மூலமும் எதிரொலிக்கும் என்பதால் அதிலிருந்து தப்பிக்கவே பாஜகஅரசு கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது என்று அரசியல்கட்சியினர் சாடியுள்ளனர்.