india

img

விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு நடவடிக்கைகளைத் தொடர்ந்திடுக.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு அறைகூவல்....

புதுதில்லி:
வேளாண் சட்ட.ங்களை ரத்து செய்வதை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்திட வேண்டும் என்று கட்சிக் கிளைகளுக்கு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் இணைய வழியாக டிசம்பர் 19 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

கேரள வெற்றிக்கு வாழ்த்துக்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு மகத்தான வெற்றியை அளித்து, இடது ஜனநாயகமுன்னணி மீது மறுபடியும் நம்பிக்கையை வெளிப்படுத்தி யமைக்காக, கேரள மக்களுக்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இடதுஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 14 மாவட்டப் பஞ்சாயத்துக்களில் 11இல் வெற்றி பெற்று, 2015இல் இருந்த 7ஐவிட அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோன்றே மாநகராட்சிகளுக்கான தேர்தல்களிலும் 2015இல் 4 ஆக இருந்த இடங்களிலிருந்து, இப்போது மொத்தம் உள்ள 6 இடங்களில் 5இல் வெற்றி பெற்றிருக்கிறது. அனைத்து மட்டங்களிலும் இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதைக் காண முடிகிறது.

விவசாயப் போராட்டம்
படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களையும், 2020 மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வலியுறுத்தி, ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு தொடர்கிறது. நாட்டின் வேளாண்மையையும், நம் நாட்டிற்கே உணவு அளித்து வரும் உழவர் பெருமக்களையும் பாதுகாத்திட நடைபெற்றுவரும் ஒளிமயமான இப்போராட்டத்திற்கு ஆதரவாக நம்கட்சிக் கிளைகள் அனைத்தும் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.

விவசாயிகள் போராட்டம் ஞாயிறன்று 25ஆவது நாளைஎட்டியிருக்கிறது. போராட்டத்தில் உயிர்நீத்து தியாகிகளாகி யுள்ள 31 விவசாயிகளுக்கும் அரசியல் தலைமைக்குழு தன் வீரவணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தில்லியிலும் வட இந்தியா முழுவதும் கடுமையான முறையில் குளிர்காற்று வீசியபோதும் அவற்றைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விவசாயிகள் மேலும் மேலும் போராட்டத்தில் இணைந்து அதனை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, அதன்பின்னர் விவசாய சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்திட வேளாண் சங்கங்களுடனும் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுடனும் கலந்து பேச அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும், அவ்வாறு விவாதத்தின் இறுதியில் ஏற்படும் முடிவின் அடிப்படையில் புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

விலைவாசி உயர்வு
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் எவ்விதத் திட்டமிடலுமின்றியும், எவ்விதத் தயாரிப்புமின்றியும் அறிவித்த சமூக முடக்கத்தின் விளைவாக மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடும் துன்ப துயரங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டன. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து மக்களின் அவலநிலையை மேலும் மோசமாக்கின.பெட்ரோலியப் பொருட்கள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது,  போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரித்து, ஒட்டுமொத்த அளவில் பணவீக்கசுழற்சியையும் உந்தித்தள்ளியிருக்கிறது. இன்றையதினம் உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோலியப் பொருட்களின் மீது மிக அதிக அளவில் வரிகள் ஏற்றப்பட்டிருக் கின்றன. மத்திய அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடித்து தன் வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மத்திய அரசு இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கிறது. 2020 நவம்பருக்கும் டிசம்பருக்கும் இடையே ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் 100 ரூபாய் உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பாகவே நாட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மந்தமாக இருந்து மக்களின் வாழ்வை வறுமை நிலைக்குத் தள்ளியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின்னர், இந்த ஆண்டு நிலைமைகள் மேலும் மோசமாயின. ஆயினும் பிரதமர் மோடி மற்றும் அவருடைய அரசாங்கம் மக்களின் துன்பதுயரங்கள் அதிகரித்திருப்பது குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

அதிகரித்து வரும் பசி-பட்டினிக் கொடுமையும், வேலை இழப்புகளும்
சமீபத்தில் வெளியாகியுள்ள தேசியக் குடும்ப நலசுகாதார ஆய்வறிக்கையானது, நாட்டில் ஊட்டச்சத்தின்மை, அதிலும் குறிப்பாக, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய குழந்தைகளிடையே ஊட்டச் சத்தின்மை அதிகரித்திருப்பதைக் காட்டியிருக்கிறது. இது, நாட்டு மக்களின் சுகாதார வாழ்வு அழிந்துகொண்டிருப்பதற்கான சமிக்ஞைகளாகும்.பிரதமர் மோடியும், மத்திய அரசாங்கமும் நாட்டில் மிக வேகமாக அதிகரித்துவரும் வேலையிழப்புகள் குறித்தோ அதனால் விளைந்துள்ள பசி-பட்டினிக் கொடுமைகள் குறித்தோ கவலைப்பட்டு அவற்றிலிருந்து மீளக்கூடிய விதத்தில் தேவைப்படும் மக்களுக்கு ரொக்க மாற்று மற்றும் இலவச உணவு அளித்திட மறுத்துள்ளன. நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 10 கோடி டன்களுக்கும் மேலான உணவு தானியங்கள் அழுகி வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அரசாங்கம் அவற்றை இலவசமாக விநியோகம் செய்திட மறுத்து வருகிறது.  அடுத்த ஆறு மாதத்திற்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று உடனடியாக அளித்திட வேண்டும், தனி நபர் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு, தலா 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக விநியோகம் செய்திடவேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
நாட்டின் வளங்களை நாட்டு மக்களுக்கு ஊட்டி அவர்களை வளப்படுத்துவதற்குப் பதிலாக, அதன்மூலம் அவர்களுக்குச் சிறிதாவது வாழ்வாதாரங்களை அளிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசாங்கம் நம் நாட்டின் வளங்களை, ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் உட்பட, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு வீணாக்கி, விரயம் செய்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும், மக்களின் அவலங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையிலும் பிரதமர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டியிருக்கிறார்.சென்ட்ரல் விஸ்டா எனப்படும் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கொரோனா வைரஸ் தொற்றால் அவதிக்குள்ளாகியிருக்கிற மக்களுக்கு  இலவச உணவு மற்றும் ரொக்க மாற்று அளித்திடப் பயன்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்துக்கு கண்டனம்
கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னெப்போதும் இல்லாத விதத்தில் ரத்து செய்திருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, பாஜக-விற்கு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கோ, அதனையொட்டி பேரணிகள் நடத்து வதற்கோ ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிறபோது மட்டும் அதனைத் தவிர்ப்பதற்குகொரோனாவைக் காரணம் காட்டிக் கொள்கிறது. மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற தன்னுடைய அரசமைப்புச்சட்டப் பொறுப்பைக் கைவிடக்கூடிய விதத்தில் அரசு நடந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்ட மறுக்கிறது.மோடி அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றைக் கையாண்டதிலும், பொருளாதார மந்தத்தைக் கையாண்டதிலும் முழுமையாகத் தோல்வியடைந்ததன் காரணமாகவும், அவற்றின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங் கள்மீது கருணையற்றமுறையில் தாக்குதல்கள் தொடுத்தது தொடர்பாகவும், விவசாயிகள் மற்றும்தொழிலாளர்களின் உரிமைகளை அழித்துக்கொண்டி ருப்பது தொடர்பாகவும் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

விஸ்ட்ரான் தொழிலாளர்கள் கிளர்ச்சிப்போராட்டம்
பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் கம்பெனியின் தொழிற்சாலையில் நான்கு மாதங்களாக அதன் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமல்ல, அவர்களை கூடுதல்நேர ஊதியம் எதுவும் இல்லாமல் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்தித்தும்  இருப்பதன் விளைவாக அங்கே வேலைசெய்துவந்த தொழிலாளர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை அரசியல் தலைமைக்குழுகவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனமான இது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். இங்கே பணிபுரியும் பத்தாயிரம் தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிரந்தரமற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களாவார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் சட்டங்கள் எதையும் மதிப்பதே இல்லை. இந்த நிலையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தபின்பு, இவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதற்கு வெளிப்படையாகவே வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.விஸ்ட்ரான் நிறுவனம் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாக ஆப்பிள் கார்ப்பரேஷன் நிறுவனமே,குற்றம்சாட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் போராடும் தொழிலாளர்களைக் கண்டனம் செய்திருப்பதும், விஸ்ட்ரான் கம்பெனியை ஆதரித்திருப்பதும் விசித்திரமாக இருக்கிறது.

தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை ஏவியிருப்பதற்கும், பலரையும் கைது செய்திருப்பதற்கும் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துக்  கொள்கிறது. நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டைக் கவர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பதை மோடி அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மத்தியக் குழுக் கூட்டம்
கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் 2021 ஜனவரி 30-31 தேதிகளில் நடத்துவது என்று அரசியல் தலைமைக்குழு தீர்மானித்திருக்கிறது. 

அரசியல் தலைமைக்குழுவின் அறைகூவல்கள்
கட்சியின் கிளைகள் அனைத்தும் கீழ்க்கண்டவிதத்தில் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.· வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுடன் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

·  தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதை எதிர்த்தும், மிகப்பெரிய அளவில் தனியார்மயத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் வர்க்கம் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.· மக்களின் போராட்டங்களுக்கு எதிராக மத்திய அரசாங்கம் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழில்: ச.வீரமணி

;