புதுதில்லி:
மோடி அரசின் மூன்று கொடிய வேளாண்சட்டங்களை முற்றாக ரத்துசெய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் விரோத மின்சாரச் சட்டத்தை எதிர்த்தும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு நடைபெற்று வரும் வரலாறு காணாத விவசாயிகள்எழுச்சி, மார்ச் 6 (இன்று) நூறாவது நாளை எட்டுகிறது.
இதையொட்டி மார்ச் 6 அன்று நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக வீடுகளிலும் அலுவலகங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி, போராடும்விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாபெரும் இயக்கத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒன்றுபட்டவிவசாயிகள் முன்னணி) அழைப்பு விடுத்துள்ளது.தில்லியை முற்றுகையிட்டு 2020 நவம்பர் 26 அன்று துவங்கிய விவசாயிகளின் எழுச்சி நூறு நாட்களை எட்டுவதையொட்டி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது எனத் திட்டமிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா, தனது பொதுச் சபை கூட்டத்தை மார்ச் 2 அன்று சிங்கு எல்லையில் நடத்தியது. விவசாயிகள் முன்னணியில் இடம்பெற்றுள்ள அனைத்து விவசாயிகளின் அமைப்புகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, நிதிச்செயலாளர் கிருஷ்ணபிரசாத், பஞ்சாப் மாநில செயலாளர் மேஜர் சிங் புன்னேவால், ஹரியானா மாநில துணைத் தலைவர் இந்தர்ஜித் சிங் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் எழுச்சியின்100வது நாளில் நாடு முழுவதும் ஆதரவு இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.நூறாவது நாளன்று தில்லியில் அனைத்து போராட்ட மையங்களிலும் ஐந்து மணி நேர ரயில் மறியல் - சாலை மறியல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியைச் சுற்றியுள்ளஅனைத்து சுங்க சாவடிகளிலும் போராட்டம் நடைபெறும் என்றும், சுங்கச் சாவடிகளில் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் கருப்புப் பட்டை அணியுமாறும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
தொடர் போராட்டங்கள்
இதைத்தொடர்ந்து மார்ச் 8 அன்று பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் தில்லியைச் சுற்றியுள்ள போராட்ட மையங்களிலும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் பெண் விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெண் விவசாயிகள் ஆற்றி வரும் அளப்பரிய பங்குகள் பற்றி இந்தப் போராட்டத்தின்போது மக்களிடையே எடுத்துச் செல்லப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மார்ச் 15 அன்று மத்திய தொழிற்சங்கங்கள், “தனியார்மய எதிர்ப்பு தினம்” கடைப்பிடிக்குமாறு விடுத்துள்ள அழைப்புக்கு,சம்யுக்த கிசான் மோர்ச்சா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தை, “கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான நாள்” என்று கடைப்பிடிக்கு மாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும், மத்திய பாஜக அரசின் விவசாய விரோத - ஏழைகள்விரோத கொள்கைகளை பின்பற்றி வரும் மாநிலஅரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை அளிக்குமாறு மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் இந்த மாநிலங்களில் பல்வேறு பிரச்சாரநிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதாரவிலை
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான பிரச்சாரத்தையும் நடத்துவது என சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. மோடி அரசு, விவசாயிகளின் பல்வேறு விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை கொடுக்காமல் மிக மோசமான முறையில் ஏமாற்றியுள்ளது. ஆனால் ஊடகங்களில் மோடி அரசும் அதன் அமைச்சர்களும் குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிசெய்துவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான உண்மையான நிலையை விளக்கும் வகையில் நாட்டின் பல்வேறுபகுதிகளில் மொத்த விலை மார்க்கெட்டுகளிலும் கொள்முதல் நடைபெறும் இடங்களிலும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான மோடி அரசின்பொய்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரம் நடைபெறும். குறிப்பாக கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக இந்தப் பிரச்சாரம் தொடங்கும்எ ன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் மகா பஞ்சாயத்து
இதனிடையே, தில்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் வகையில் உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகியமாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில்தொடர்ச்சியாக விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஒவ்வொருஇடத்திலும் பல பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். இந்த நிகழ்வுகளில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் உள்ளிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.நூறாவது நாளை எட்டும் நிலையில் உலக வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான எழுச்சியாக இந்திய விவசாயிகளின் எழுச்சி மாறியிருக்கிறது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவோடு நடைபெறும் இந்த எழுச்சியைக் கண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு எரிச்சலும்ஆத்திரமும் அடைந்துள்ளது. பேச்சுவார்த்தை யை மறுதலிக்கும் அதேநேரத்தில், போராட்டத்தை ஒடுக்கவும், சீர்குலைக்கவும் மேற்கொண்ட அனைத்து இழிமுயற்சிகளும் படுதோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து இழுத்தடிப்பதன்மூலம் விவசாயிகளை சோர்வடையச் செய்து போராட்டத்தை கைவிடச் செய்துவிடலாம் என்று பாஜக அரசுகருதுகிறது. ஆனால் விவசாயிகள் நூறாவது நாளில் இன்னும் பல மடங்கு உத்வேகம் பெறுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின்ஆதரவோடு இந்தப் போராட்டம் நூறாவது நாளை தாண்டி நீடிக்க இருக்கிறது.மூன்று கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் உறுதியாக நீடிக்கும்என்று அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லா உள்ளிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள்அறிவித்துள்ளனர்.
******************
தமிழகத்தில் இன்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரியும் இந்திய விவசாயிகளின் போராட்டம் தில்லி மாநகரைச் சுற்றி நவம்பர் 26 முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய பாஜக அரசின் பல்வேறு கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தும், கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் மார்ச் 5ல் 100-வது நாளை எட்டுகிறது. 100 நாளைக் கடந்தும் நடக்கின்ற விவசாயிகளின் இந்த வீரஞ்செறிந்த அறவழிப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலும், 100 நாட்களாக விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்க்க விரும்பாமல், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துவரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மார்ச் 6 ஆம் தேதி இந்தியா முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிவது, மற்றும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற அறைகூவலை விடுத்துள்ளது. அதை நிறைவேற்றும் பணியில் தமிழகத்திலும் ஒன்றிய மட்டங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், மாநிலத் தலைநகரத்திலும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுத்துள்ளது. சென்னையில் நடைபெறும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், போராட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.