india

img

கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் வழங்க என்ன ஏற்பாடு? பிரதமருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்

கோவை:
கொரோனா தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் வழங்குவதற்கு மத்திய அரசு என்ன வகையிலான முன்னேற்பாடுகள் செய்துள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறையின் மூலம் பிரதமர் மோடிக்கு பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு கூட பலரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இதனை கருத்தில் கொள்ளாமல் இன்று பாரத பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வில்பத்து எம்.பி.,களுக்கு குறைவாக உள்ள கட்சிகளுக்கு பேச அனுமதிமறுத்திருப்பது ஏற்புடையதல்ல. இது வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் குரலை முடக்குவது மட்டுமன்றி, வாக்களித்த மக்களின் குரலைமதிக்காத போக்கு என்பதை மத்தியஅரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதேநேரத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதி என்கிற முறையில்மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறையின் மூலம் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த எனது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கடிதம் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளேன். 

இதில் அரசு மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போராடும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிகளை இதுபோன்ற நோய் பேரிடர்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள எதுபோன்ற கட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதேபோன்று கொரோனா தடுப்பு மருந்து எந்த காலகட்டத்திற்குள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கொரோனா வேக்சின் அனைவருக்கும் தரப்படுவதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளது உண்மையா? மத்திய அரசு தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் வழங்குவதற்குஎன்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதாரம் மீளும் காலம்வரை மாதா, மாதம் நிவாரண நிதி வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதாஉள்ளிட்ட கேள்விகளை நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;