சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடி வருகின்ற விவசாயிகளின் சமூகவலைதள பக்கத்தை முடக்கிய முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்திற்கும் பெரும் முதலாளி முகேஷ் அம்பானிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின்மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்திய விவசாயத்தையும், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க தில்லியில் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக கடும் குளிரில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கை மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டத்திருத்த மசோதாவையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் வாபஸ் பெற வேண்டும் என்பதேயாகும்.
மேற்கண்ட சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு இட்டுச்செல்லும் என்றும் இதனால் முகேஷ் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதோடுபொதுத் துறைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர். இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் கிசான் ஏக்தா மோர்ச்சாவின் முகநூல் பக்கம் அண்மையில் முடக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், முடக்கத்தை நீக்கியது முகநூல் நிறுவனம். இது தற்செயலான நிகழ்வு அல்ல என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருதுகிறது.டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் “பியுல் பார் இந்தியா” (இந்திய வளர்ச்சிக்கான எரிபொருள்)என்கிற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கில் முகநூல் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் மற்றும் அம்பானிஇணையவழியில் உரையாடினர். இந்நிகழ்வில் ஜியோ மற்றும் முகநூல் ஆகிய இருபெரு நிறுவனங்களும் இந்தியாவில் தகவல்தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடல் நடந்த பிறகே விவசாயிகளின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
இத்தகைய தரக்குறைவான வேலைகளால் விவசாயிகளின் போராட்டங்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. இதற்கு முறையான காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் இதுபோன்ற எளியமக்களின் குரலை ஒடுக்கும் முகநூல் நிறுவனத்தின் போக்கையும், அதற்கு துணை போகும் முகேஷ் அம்பானியையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கடுமையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற ஜனநாயகவிரோத போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கைவிடுக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.