headlines

img

வெங்காயமும், விவகாரமும்

வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் அளவிற்கு அதன் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம் இதே காலத்தில் அரசின் அலட்சியத்தால் 30 ஆயிரத்து 400 டன் வெங்காயம் அழுகி வீணாகியிருக்கிறது. இதன் மூலம் மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு எந்தளவிற்கு அலட்சியம் காட்டி வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் பொதுவாக நவம்பர் மாதத்தில் வெங்காய விலை உயர்வது வழக்கமான ஒன்று. மத்திய அரசு முன்கூட்டியே வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு வதாகக் கூறியது. ஆனால் என்ன நடந்தது? கடந்த செப்டம்பர் மாதம் 57 ஆயிரத்து 872 டன் கையிருப்பு இருக்கிறது என தேசிய விவசாய கூட்டுறவு சந்தைக்கான அமைப்பு அறிவித்தது. ஆனால் இருவாரங்களுக்கு முன்பு கையிருப்பு வைத்திருந்த வெங்காயத்தில் 30 ஆயிரத்து 400 டன் வெங்காயம் அழுகி  வீணாகி விட்டது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.   இன்றைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 தொட்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்த ளவில் பெரும்பகுதி மக்களின் உணவில் அத்தி யாவசிய பொருளாக வெங்காயம் மாறியிருக்கிறது. அப்படியிருக்கையில் அதனை  தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசை சார்ந்ததுதான்.  

வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தாலும், விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைப் பதில்லை. சமீபத்தில் சஞ்ஜெய் சாத்தேவ் என்ற வெங்காய விவசாயி தான் உற்பத்தி செய்த வெங்காயத்தை கடுமையாக பேரம் பேசி  1 கிலோ ஒரு ரூபாய் 45 பைசா வீதம் 750 கிலோவை ரூ.1064க்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தார். மத்திய அரசின் விவசாய கொள்கை எங்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கி றது, இதைவிட எங்களைக் கேவலப்படுத்த முடியுமா என ஆவேசமாக கேட்டிருந்தார். 

இந்தியாவில் ஆண்டுக்கு வெங்காய உற்பத்தி 2 கோடியே 30 லட்சம் டன். இதில் இந்திய மக்களின் வெங்காய பயன்பாடு ஆண்டிற்கு 1 கோடியே 60 லட்சம் டன் மட்டுமே. அப்படியிருந்தும் ஏன் பற்றாக்குறை ஏற்படுகிறது? வெங்காய விவகா ரத்தில்  என்ன தான் நடக்கிறது? மோடி அரசு எப்போதும் போல் இடைத்தரகர்களின் ஆதர வாளராகவே செயல்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை  12 லட்சத்து 40 ஆயிரம் டன் ரூ. ஆயிரத்து 840 கோடிக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டி ருக்கிறது. இதற்கு அரசு 10 சதவிகிதம் மானியம் வேறு அளித்திருக்கிறது.

ஆனால் நவம்பர் மாதம் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்தும்  ‘டிஜிட்டல் அரசு’ என மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசு வெங்காயத்தை சேமித்து வைக்க எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த அரசிற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை விட இடைத் தரகர்களின் நலனே முக்கியமாக இருந்து வருகிறது. அதுதான் தற்போது வெங்காய விலை யேற்றத்திலும் வெளிப்படுகிறது.

;