headlines

img

மனித குல விரோதிகள்!

கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலை முறை யாக கையாளாமல் லட்சக்கணக்கான மக்க ளின் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த கொடு மைக்காக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ  மீது ‘பெருவாரியான மக்களை படுகொலை செய்த குற்றம்’ சாட்டி அவர் மீது விசாரணை நடத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபையின் விசாரணை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக அரசுகளிடையே இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோவிட் 19 பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடு பிரேசில். 6 லட்சத்திற்கும் அதிமான மக்களின் உயிர் பறிபோனது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப்பை போல பிரேசிலின் பொல்சானரோவும், கோவிட் பரவலால் மக்கள் செத்து விழுவதை அலட்சியமாக புறம் தள்ளி னார். எல்லோருக்கும் நோய் பரவட்டும்; அப்போது தான் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று பகிரங்கமாகப் பேசினார். இத்தகைய கிரிமினல் தனமான கொள்கையின் காரணமாகவே நோய் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் அவரது அரசு மேற் கொள்ளவில்லை. அந்த அலட்சியத்தின்  விளைவே 6 லட்சம் மக்களின் மரணம். 

ஜனாதிபதி பொல்சானரோவும் அவரது அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உட்பட  65 பேரும், இரண்டு பெரும் மருந்து நிறுவனங்க ளும் என பல தரப்பினர் மீது செனட் சபையின் விசாரணை கமிஷன் 24 வகையான குற்றச் சாட்டுகளை முன்மொழிந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொல்சா னரோ  மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற குரல் பிரேசிலில் எழுந்துள்ளது.

செனட் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு கள், வலதுசாரி அதிதீவிர முதலாளித்துவ ஆட்சி யாளரான பொல்சானரோ மனித குலத்திற்கு எதிராக நடத்திய படுகொலை குற்றங்கள் தொடர்பானவை ஆகும். 

கோவிட் பரவலை தடுக்கவும் மரணங்களை கட்டுப்படுத்தவும் முதலாவது அலை தந்த படிப்பி னைகளை உள்வாங்கிக் கொண்டு அனைவ ருக்கும் அவசரமான முறையில் இலவசமாக தடுப்பூசி செலுத்துவது என்ற பணியை மேற் கொள்ளத் தவறியது, நிச்சயம் மனித குலத்திற்கு எதிரான படுகொலைக் குற்றம்தான். இது பொல்சான ரோவுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. 

அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் தான் மிகப்பெரும் இழப்பை, மரண ஓலத்தை சந்தித்தவை. இந்தியாவில் அதிகா ரப்பூர்வமாக 4.53 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள் ளன. ஆனால் பதிவு செய்யப்படாத, பாஜக மாநில அரசுகளால் மறைக்கப்பட்ட மரணங்கள் பல லட்சம். இந்த குற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது? இந்த மரணங்கள் ஆட்சியாளர்களின் அலட்சி யத்தால் நிகழ்ந்தவை. அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை மறுத்து, மாநில அரசுகளை விலை கொடுத்து வாங்குமாறு நிர்ப்பந்தித்து ஒட்டு மொத்த தேசத்தையும் அலைமோதச் செய்ததன் விளைவாக நிகழ்ந்தவை. 

எனவே பிரேசில் ஜனாதிபதியை போலவே இந்திய பிரதமரும் படுகொலைக் குற்றவாளியே!

;