headlines

img

எவ்வளவு அடித்தாலும்... (அநீதி ,துரோகம்=பாஜக )

தமிழகத்திற்கு அநீதி இழைப்பதும் துரோகம் செய்வதும் பாஜக அரசுக்கு பழகிப்போன செயல்.ஆனால் அதற்கு ஒத்துழைத்தும் அடிபணிந்தும் போவதே அதிமுகவின் இயல்பாக இருந்தால் பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கும் கொண்டாட்டம் தானே. நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்லவர்கள் என்று பாராட்டத்தானே செய்வார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வை தமிழில் நடத்தவே அதிமுக கோரியது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதை எதிர்த்து முனகக் கூட இல்லை தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும். அவர்களை விட்டால் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் கூட வாயையே திறக்கவில்லை. அந்தளவுக்கு தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் என்று எஜமானர் விசுவாசத்தில் திகைத்துப்போய் விட்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்காத நிலை ஏற்படும் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஓங்கி அடித்திருக்கிறார் பியூஸ்கோயல். தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்ததை மறந்துவிட்டார்கள். இதை தமிழக மக்களும் மாணவர்களும் மறந்து விடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள் போலும்.


இந்த அதிர்ச்சி மறையும் முன்னே ஞாயிறன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சேலம், சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமென்று சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசும்போதே அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் எட்டுவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய தமிழக அரசின் அரசாணை செல்லாது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வாரங்களுக்குள்விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆறு மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தங்கள் நிலத்தில் இறங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அந்த சுவடு மறையும் முன்னேமத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதன் மீது இடிதாக்கியது போல் இவ்வாறு பேசியிருக்கிறார்.மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசுகள் இருந்தால்தான் நல்ல திட்டங்கள்நிறைவேறும் என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தேர்தல் பிரச்சாரத்திற்குபோகும் இடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு தான் கட்காரியின் பேச்சு. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டமான ரசாயன மண்டலத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது அதிமுக அரசு என்ற எண்ணத்தில், நாம் என்ன செய்தாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் பாஜக அரசும் அதன் அமைச்சர்களும் ஓங்கி அடிக்கிறார்கள். இவர்களும் மவுனமாக இருக்கிறார்கள்.தமிழகமே பாலைவனமானால் என்ன? நமதுகாட்டில் மழை பொழிந்தால் போதும் என்கிற எண்ணத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் இருப்பது நன்றாக தெரிகிறது. அவர்களுக்கு தமிழக மக்கள்நல்ல பாடம் புகட்டுவார்கள்.



;