headlines

img

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்...

தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிற, துரோகம் செய்து வருகிற மத்திய ஆளும் கட்சியான  பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை தமிழக மக்கள்ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தக்கூட்டணியை நியாயப்படுத்துவதற்காக முதலமைச்சர்  பழனிசாமி முயன்று கொண்டிருக்கிறார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநில அரசுக்கு தேவையான நிதி கிடைக்கும்என்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் முழுமையான நிதி பெற்று மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அதைத்தான் மத்திய பாஜக அரசுடன் இணைந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.ஆனால் உண்மை நிலை நேர்மாறானதாக அல்லவா இருக்கிறது. இந்த ஆட்சியை ஜெயலலிதாவின் ஆட்சி என்கிறார்கள். ஆனால் மத்திய அரசால் திணிக்கப்பட்ட, தமிழக மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் உதய் மின்திட்டம் போன்ற திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் இவரோதமிழக மக்களின் நலனைப்பற்றி கவலைப்படாமல் அத்தனை திட்டங்களையும் அடிபிசகாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு அமல்படுத்துகிறார். 

இவர்களுக்கு தமிழக மக்களின் நலன் முக்கியமில்லை. தங்களது ஆட்சி தொடர வேண்டும்; நீடிக்க வேண்டும்; தங்களது அமைச்சர் பதவியைதக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம்கிடைக்கும் ஆதாயத்தை விட்டுவிடக் கூடாது என்பதுதானே. 
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை, இதர வரிவருவாய் பகிர்வுத் தொகை, கஜா புயல் முதலானஇயற்கை பேரிடர்களுக்கான நிதியுதவி கோரிக்கைத் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான தொகை, உள்ளாட்சி களுக்கான நிதி போன்றவற்றில் தமிழக அரசு கேட்டதையெல்லாம், இவர்களின் இணக்கமான மத்திய அரசு அப்படியே வழங்கிவிட்டதா? அப்படிஎன்றால் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்மேல் கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

இந்த நான்காண்டுகளில் நடந்தவற்றை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதன் துயரத்தை அனுபவித்துக் கொண்டும்இருக்கிறார்கள். ஆனால் முதல்வரோ ஏதோ, இவர்கேட்டதை எல்லாம் மத்திய அரசு கொடுத்தது போல பசப்புகிறார்.இந்நிலையில் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பது யாரை ஏமாற்ற? தமிழகமக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விதிவிலக்கு மசோதாவுக்கு ஏற்பட்ட கதியையும் ஏழுபேர் விடுதலை மசோதாவுக்கு ஏற்பட்ட கதியையும் மக்கள் மறந்திடவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கானதுமல்ல, வளர்ச்சிக்கானதுமல்ல. இவர்களது சொந்த மக்களின்  நலனுக்கும் வளர்ச்சிக்குமானதுதான். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் -தம் “மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்” என்ற எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

;