headlines

img

சுற்றுச்சூழலை அழித்து துறைமுக விரிவாக்கமா? 

சென்னை அருகே 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை, சுமார் 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக்கூட்டம்வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

கொரோனாவைக் காரணம் காட்டி மிகச் சிறியளவில் இந்த கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்  மக்களின் பங்களிப்போ அல்லது உண்மையான மனநிலையோ பதிவு செய்யப்படாமல் போக வாய்ப்புண்டு. எனவே இந்தக்  கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 மக்களுக்குச் சொந்தமான நிலம் , 1515 ஏக்கர் டிட்கோவிற்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றைக் கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இத்திட்டத்திற்காக, நில மீட்பு என்ற பெயரில்  கடலில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்தொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது என்பது திரும்பச் சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.துறைமுகம் விரிவாக்க திட்டமிட்டுள்ள பகுதிசேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான கடல் பகுதியாகும். இங்கு இறால், நண்டு,நவர மீன், கிழங்கான், கானாங்கெளுத்தி போன்றகடலுணவுகள் அதிகம் கிடைக்கின்றன. துறைமுகவிரிவாக்கத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான் “வெள்ள வடிகாலாக” செயல்பட்டு மழைக்காலங்களில் சென்னையைப் பாதுகாக்கின்றன. ஏற்கனவே, சென்னை, எண்ணூர் துறைமுகத்தால் கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ.களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாகச் சுருங்கியுள்ளது.காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. கண்மூடித்தனமான தொழிற் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகள் அதிகசூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் சுற்றுச்சுழல் மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. இயற்கை வளத்தையும், ஒரு லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து,  சென்னை மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், துறைமுக விரிவாக்கத் திட்டம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். 

;