headlines

img

போராட்ட நெருக்கடியால் ஆளுநர் எடுத்த முடிவு இது...    

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தொடர்ந்துஇழுத்தடித்து வந்தநிலையில், மாநில அரசு இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டது. உயர்நீதிமன்றமும் இந்த விஷயத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றபோதும் அவர் மனசாட்சிபடி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடுவழங்குவதில் மோடி அரசுக்கு உடன்பாடு இல்லை. அவர்களது கண்ஜாடைக் கேற்பவே ஆளுநர் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மசோதாவை பரிசீலிக்க காலஅவகாசம் வேண்டுமென்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  உள்ஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்பதே ஆளுநரின்எண்ணமாக இருந்தது. 
அர்த்தமற்ற முறையில் ஆளுநர் இழுத்தடிப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்திய மாணவர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த பின்னணியில் இனி வேறு வழியே இல்லை என்றநிலையில்தான் ஆளுநர் இறங்கி வந்து, தம்முடையமரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார். 

சட்டப் பேரவையில் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்குஅனுப்பப்பட்ட உடனேயே அவர் இசைவு தெரிவித்திருந்தால் அவரது கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் ஆளுநர் இந்த விஷயத்தில் கெடு நோக்கத்துடன்தான் நடந்து கொண்டார் என்பது தெளிவு.ஆளுநர் இழுத்தடித்த நிலையில், மாநிலஅரசு அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்க ஒன்று. இதன்மூலம் இந்தாண்டே அரசுப்பள்ளி மாணவர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டின் மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பு கிட்டியுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை தாங்கள் ஏற்கவில்லை என்று அதிமுக அரசு கூறினாலும்,அந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மாநில அரசு தவறிவிட்டது. கல்வி என்பதுதற்போது ஒத்திசைவு பட்டியலில் இருந்தபோதும், மோடி அரசு கல்வித்துறையை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  கொண்டு செல்கிறது.

இந்தாண்டு மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மோடி அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அதை பின்பற்ற மறுக்கிறது.மத்திய அரசின் வாதத்தை ஏற்று இந்தாண்டு இடஒதுக்கீட்டுக்கான வாய்ப்பை உச்சநீதிமன்றமும் மறுத்துள்ளது. கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஆளுநர் என்பவர் மத்திய அரசின்கைக் கருவியாகவே செயல்படுகிறார் என்பதுமீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

;