headlines

img

தேசத்திற்கே அவமானம்!

மத்திய அரசு ஐரோப்பிய நாடுளைச் சேர்ந்த வலதுசாரி எம்.பி.க்களை ஜம்மு- காஷ்மீருக்குள் செல்ல அனுமதித்திருக்கிறது. இது இந்திய இறை யாண்மைக்கும் எதிரான அப்பட்டமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.

இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு மாறாக ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தையே சிறை கொட்டடியாக மாற்றி அதன் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியது. இன்றோடு 88 நாட்களாக அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முடக் கப்பட்டிருக்கிறது. சந்தைகளும் வர்த்தக நிறுவ னங்களும் மூடப்பட்டிருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியில் நடமாட அனுமதியில்லை. வீட்டுக் காவலில் சிறையிடப்பட்டு சித்ரவதை. சமூக ஆர்வலர்களுக்கும் தடுப்புக் காவல். இந்திய அரசி யலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. கல்வி, சுகாதாரம், மத உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அப்பட்டமாக மறுக்கும் கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த மாநில மக்களின் நலன் குறித்து நேரில் பார்வையிட, இந்திய மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கும், இந்திய அரசியல் கட்சி தலைவர்களுக் கும், ஊடகங்களுக்கும் மோடி அரசு அராஜக மான முறையில் அனுமதி மறுத்து வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மோடி அரசு அவமதித்து வருகிறது. உச்சநீதிமன்ற மும் பெயரளவில் தலையிட்டு தள்ளி நிற்கிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக ளுக்கான ஆணையர் ரூபர்ட் கால்வில்லி,  மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடி யிருக்கிறார். உச்சநீதிமன்றமும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுதந்திரமான நடமாட்டம், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு, ஆட்கொணர்வு ஆகியன குறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை மிகவும் மெதுவாக விசாரணை நடத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்நிலையிலேயே தனது தவறை மூடி மறைக்க,  பாசிசத்திற்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வலதுசாரி எம்.பி.க்களுக்கு மட்டும்  ஜம்மு- காஷ்மீருக்குள் செல்ல மோடி அரசு அனுமதியளித்திருக்கிறது. அதுவும் இந்த எம்.பி.க்களை  ஏற்பாடு செய்தவர் ஆர்எஸ்எஸ் தொடர்பு டைய சர்வதேச புரோக்கர் மடி சர்மா என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள லிபரல் கட்சியின் கிறிஸ் டேவிஸ், மோடி அரசின் இந்த நாடகத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அதில் அவர் “காஷ்மீரைப் பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட நான் அனுமதி கேட்டிருந்தேன். உடனே எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டது. காஷ்மீரில் நடப்பதை இந்திய அரசு மூடி மறைக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் மறுக்கப் படுகிறது. உலகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்” என மோடியின் நாடகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

சொந்த மக்களை வெளியே தள்ளி விட்டு, அந்நியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது பாஜகவிற்கும் மோடிக்கும் வேண்டுமானால்  அழ காக இருக்கலாம். ஆனால் இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

;