headlines

img

புதிய மதுரை மலரட்டும்

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொகுதியை மையப்படுத்தி, அத்தொகுதியை எப்படியெல்லாம் மேம்படுத்த முடியும் என்ற விரிவான திட்டத்துடன் கூடிய தேர்தல்அறிக்கை மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.மதவெறி பாஜக - அதன் கூட்டணியை வீழ்த்துவோம்; நாடாளுமன்றத்தில் சிபிஎம் மற்றும் இடதுசாரிகளின் பலத்தை உயர்த்துவோம்; மத்தியில் மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைய வழிசெய்வோம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய தேசம் மலர்ச்சி கொள்ளவும், வளர்ச்சி பெறவும் எத்தகைய மாற்றுக் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்; இடதுசாரிகள் அதிகாரத்திற்கு வந்தால் மக்கள் நலன் காக்க எத்தகைய மாற்று திட்டங்கள் அமலுக்கு வரும் என்பதை விரிவான முறையில் கட்சியின் மத்தியக் குழு தேர்தல் அறிக்கையில் விவரித்துள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவைஆகிய தொகுதிகளில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் நிற்கிறது. இந்நிலையில், மாமதுரையின் வரலாற்றை மீட்டெடுத்திட, மிக நீண்டகாலமாக பின்தங்கியிருக்கும் மதுரையின் வளர்ச்சியை உறுதி செய்திட, நவீன மாநகரமாக மாற்றிட ஒரு தொலைநோக்கு பார்வையுடன் மதுரை தொகுதி தேர்தல் அறிக்கையை வேட்பாளர் சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கிறார்.


வரலாறு - வளர்ச்சி - நவீனம் ஆகிய முத்திரைபதிக்கத்தக்க முழக்கங்கள் அந்த தேர்தல் அறிக்கையை வழி நடத்துகின்றன. இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்கு இணையான வரலாற்று பாரம்பரியமும், தமிழகத்தின் பண்பாட்டு தலைநகரமாக கொண்டாடப்படுகிற தகுதியும் கொண்ட மதுரை, அதிமுக ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி நவீன வளர்ச்சி ஏதும் இல்லாத, குப்பைகளும், கொசுக்களும் நிறைந்த நகரமாக; பிரம்மாண்டமான வைகை நதியும், மதுரையின் குருதியோட்டமாக இருந்த கிருதுமால் நதியும் பல இடங்களில் சாக்கடை நிரம்பியதாக மாறிப் போன நகரமாக காட்சியளிக்கிறது. மனித நாகரீகத்தின் தாய் மடியாக மதுரையும்இருந்தது என்ற மாபெரும் வரலாற்று ஆவணமாக காட்சியளிக்கும் கீழடி அகழ்வாய்வை மேலும் உறுதி செய்ய மறுத்த - தவறிய மத்திய - மாநில பாஜக - அதிமுக ஆட்சியாளர்களின் அராஜகத்தை அம்பலப்படுத்துவதாக மட்டுமல்ல; உலக புகழ்பெற்ற அன்னை மீனாட்சி ஆலயம் உள்பட ஏராளமான சுற்றுலா மையங்கள்இருந்தும் கூட மதுரை ஒரு சர்வதேச தரம்வாய்ந்தசுற்றுலா தலமாக மாற்றப்படாத - ஆட்சியாளர்களின் தொலைநோக்கு பார்வையில்லாதஅலட்சியத்தை வீதிக்கு கொண்டு வருவதாகவும்இந்த தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. தேசப்பிதாவை அரையாடைக்கு மாற செய்து இந்திய விடுதலைப் போராட்டத்தை இன்னும் உத்வேகமாக்கிய மாமதுரை, மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றால் அந்த மாபெரும்வரலாற்றை நவீனமயத்துடன் இணைத்து ஒரு புதிய மதுரையாக - தமிழக பண்பாட்டின் நவீன அடையாளமாக மாற்றுவதை உறுதி செய்யும். வெல்லட்டும் இந்த முழக்கங்கள்.

;