headlines

img

கறுப்பு பண ஆட்சி முடிவுக்கு வரட்டும்

கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று முழங்கினார். அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்து கடைசியாக அளித்த பேட்டியில் கூட இதுகுறித்து அவர் வாய்திறக்கவில்லை. சொல்லப்போனால் எதுகுறித்தும் அவர் வாய்திறக்கவில்லை.மறுபுறத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?அவர்கள் பதுக்கியுள்ள தொகை எவ்வளவு? என்றவிவரத்தைக் கூட வெளியே சொல்ல முடியாது எனமோடி அரசு மறுத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி நிதிக்கணக்கு பற்றிய தகவல்களை இரு நாடுகளும் தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள வகை செய்யப்பட்டது. இதன்படி 2018முதல் இரு நாடுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த விவரம் என்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது இது ரகசியமானதென்றும் இதை வெளியே சொல்ல முடியாது என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.இதுவரை சுவிட்சர்லாந்து அரசு தகவல் அளிக்க மறுக்கிறது என்று கூறி, கறுப்புப் பண முதலைகளை காப்பாற்றி வந்தனர். இப்போது தகவல் கிடைத்தாலும் அதை வெளியே சொல்லமறுக்கின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால்இதுவரை அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைஎன்ன என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

மோடி அரசின் நோக்கம் கறுப்புப்பணத்தை கைப்பற்றுவதல்ல. மாறாக அவர்களை காப்பாற்றுவதுதான். ஏனெனில் கறுப்புப்பண பேர்வழிகள் தான் பாஜகவின் தேர்தல் செலவுக்கு பெரும் தொகையை தருபவர்கள். இந்தியாவில் உள்ளகட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பெரு முதலாளிகளிடமும் அதிகளவு கட்சி நிதிவசூலிப்பது பாஜகதான் என்பது வெளிப்படையாகவே வெளிவந்துவிட்டது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுதிருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் பட்டியலை கூடஇவர்கள் வெளியே சொல்வதில்லை. அவர்கள் பெரும் தொகையை ஏப்பம் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய பிறகுதான் அவர்கள் சுருட்டிய தொகை எவ்வளவு என்பதே தெரியவரும். இதேபோலத்தான் கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கும் விவகாரத்திலும் மோடி அரசு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.இவர்கள் ஒருபோதும் கறுப்புப்பண பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனெனில் கறுப்புப்பணத்தால் கட்டப்பட்ட ஆட்சி இது. பணமதிப்பிழப்பு என்கிற பெயரில் கறுப்பை வெள்ளையாக்க உதவிய மோடி ஆட்சியின் சாயம் வெளுக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

;