headlines

img

கூடாது இந்த அநீதி

தமிழகத்தில் அஞ்சல் துறை, ரயில்வே போன்ற மத்திய அரசு துறைகளை தொடர்ந்துதமிழ்நாடு மின்வாரியத்திலும் பிற மாநிலத்தவரை பணி நியமனம் செய்யும் கொடுமை நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானகழகம் கடந்த டிசம்பர் மாதம் உதவி பொறியாளர் பணியிடங்களுக்காக நேரடி தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தியது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 300 பேரில் 36 பேர் அதாவது 12 சதவீதம் பேர் ஆந்திரா, கர்நாடகம், கேரளா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. 

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் தமிழே தெரியாத வட இந்திய மாணவர்கள் தமிழில் அதிகமதிப்பெண்கள் பெற்றதாக 2017ல் தேர்வு செய்யப்பட்டது முதல் அநியாயம். அதைத் தொடர்ந்து ரயில்வே பணியிடங்களில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களில் வட இந்தியர்களைநியமனம் செய்தது இரண்டாவது அநியாயம். ரயில்வேயில் பிற மாநிலத்தவரை பணியில்அமர்த்தினால் ஏற்படும் விபரீதம் என்னவென்பதற்கு கடந்த மாதம் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் வந்து மோதவிருந்த சம்பவமே எடுத்துக்காட்டாகும். தமிழ்நாட்டில் பணி நியமனம் செய்யப்பட்ட பிற மாநிலத்தவர்கள் தமிழ்மொழியில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பதை மத்தியஅரசு கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால்தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசு தமிழகத்தில் மின் வாரியத்தில் பணி நியமனம் செய்வதற்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும்என்பதை அடிப்படை அம்சமாக கொள்ளவில்லைஎன்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். 

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் ஒரு கோடி பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிற மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, பிற நாட்டினரும் வேலைக்கான போட்டியில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யும் முறையில் அதிமுக அரசு 2016ஆம்ஆண்டு புதிய சட்டம் கொண்டு வந்ததே இப்போதைய நிகழ்வுக்கு மூல காரணமாகும்.அந்த சட்டத்தின்படி ஏற்கெனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திர பொறியியல் துறைக்கு விரிவுரையாளர்கள் பணிக்கு 46 பேர்அதாவது 68 சதவீதம் பேரும் மின்னணு தொடர்பியல் துறைக்கு பொதுப்பிரிவில் 36 பேருக்கு 31பேரும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த துரோகமும் தமிழக அரசால் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைத்துவிட்டு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணிக்கு தேர்வு செய்திருப்பது கொடுமையிலும் வஞ்சனை. கர்நாடகம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே அரசுப் பணி நியமனம் என்பதை போல உடனடியாக சட்டமாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவே இத்தகைய அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்.

;