headlines

பழைய சொல், புதிய தேடல்

வணிகம் செய்ய இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் கடலோர மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அவர்களிடம் உரையாடுவதற்கு தமிழ்மொழி தேவைப்பட்டது. அதற்காக ‘கார்ட்டிலா’ என்கிற நூலை அச்சிட்டார்கள். ஆண்டு கி.பி.1554 பிப்ரவரி, 11. இந்நூல் போர்ச்சுகல் தலைநகர் ஸிஸ்பனில் வெளியானது. தமிழ் அல்லாது தமிழ் ஒலிப்பில் அச்சேறிய நூல் இது. எழுத்துரு - ரோமன் லிபி; உச்சரிப்பு - தமிழ். உலக அச்சு இயல் வரலாற்றுக்கு அரும்பெரும் சான்றாக விளங்கும் கார்ட்டிலாவின் ஒரே ஒரு பிரதி லிஸ்பன் நகர் பெலம் அருங்காட்சியகத்தில் ஒரு இரும்பு பெட்டகத்திற்குள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னவர் தனிநாயகம் அடிகளார். (ஆதாரம், ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர்). 1542ஆம் ஆண்டு, போர்ச்சுக்கீசிய பாதிரியார் புனித சவேரியார், கோவா வருகிறார். புதிதாக கிறித்தவ மறை தழுவிய மக்களுக்கு ஜெப மந்திரங்கள் சொல்லிக்கொடுப்பதற்காக DOCTRINA CHRISTAM என்கிற நூலை போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். இந்நூலை 1578ஆம் ஆண்டு, ஹென்றிக்ஸ் அடிகளார் தமிழில் ‘தம்பிரான் வணக்கம்’ என மொழிபெயர்த்து அச்சு நூலாக்கினார். (அச்சில் ஒற்று இல்லாமல்  தமபிரான வணககம என உள்ளது). இந்திய மொழிகளில் முதலில் அச்சேறிய மொழி தமிழ்தான். இந்நூலின் தலைப்புகள் போர்ச்சுகீசிய மொழியிலும் ஜெபங்கள் தமிழிலும் அச்சேறியுள்ளன. இந்நூலின் கடைசி வரி ‘Soli DEO honor,  et gloria - Amen’ (இது கடவுளுக்கே பெருமையும் புகழும் - ஆமென்).  இந்நூல் அச்சேறிய இடம் கொல்லம் இறை மீட்பர் கல்லூரி (ஆதாரம் - மோ.நேவிஸ்  விக்கோரியா தொகுத்த முத்துக்குளித்துறைப் பரதவர்கள்).

1714ஆம் ஆண்டு சீகன்பால்கு, தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் புதிய ஏற்பாடு (பைபிள்) நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சில் ஏற்றினார். தமிழின் முதல் அச்சு நூல் சீகன் பால்கு அச்சேற்றிய புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்புதான் என்கிறது ஜான் முர்டோ தொகுத்த Tamil Printed Books  -1865. இப்பதிவு தவறானது. Doctrina Christam என்றால் விசுவாசக் கோட்பாடுகள் என்று பொருளாகும். இதுவே மொழிபெயர்ப்பில் தம்பிரான் வணக்கம் என்றாகியது. வணக்கம் என்பது ஜெபம் (Prayer), வழிபாடு (Worship).

தம்பிரான் என்பது என்ன?
தம்பி ரானருள் சார்வினைச் சார்ந்துய்வான் - (இரட்சணிய யாத்திரிகம்) 
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த 
தம்பிரான் என்ன தானும் தமிழிலேதாலை நாட்டி (கம்பராமாயணம்).
திருவிதாங்கூர் அரசரின் பட்டப்பெயர் தம்பிரான். 
சைவத் துறவிகள் தம்பிரான்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
 

பதிணெண் சித்தர்களில் ஒருவர் தம்பிரான் சித்தர். இவரது சமாதி காங்கயத்திற்கு அருகில் ஊதியூர் மலையில் உள்ளது. பெரிய தம்பிரான், சலவைத் தொழில் செய்பவர்களின் குலதெய்வம். இலங்கை மட்டக்களப்பில்  இத்தெய்வத்திற்கான ஆலயங்கள் நிறைய உள்ளன.  ‘தம்பிரான் தோழர்’ என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்கிறது `திருத்தொண்டத் தொகை’. நன்னூல் இலக்கண நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர் ‘கூழங்கைத் தம்பிரான்’. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’ - அ.தாமோதரன் எழுதிய ஒரு நூல். தம்பிரான் - தம் + பிரான், தம் என்பதற்கு கொடை, தற்காத்தல், நன் முகூர்த்தம், பங்கிடுதல், புண்ணியம், மகாவாக்கிய நான்கினொன்று, மனையாட்டி, உயிர் எனப் பல பொருளுண்டு.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஒரு நூல் ‘புத்த தம்மம்’ அதாவது, ‘புத்தம் அற வழி’. இங்கு தம் என்பது அறம். இதிலிருந்து தம்பிரான், அறத்தின் தலைவன். நா.கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியின் படி, தம்பிரான் - கடவுள், கட்டளைப்படி நடத்துவோன், திருகூட்டத்தலைவன். லிப்கோ தமிழ் அகராதியின் படி, தலைவன், மடங்களின் சைவத் துறவி. தம்பிரான் வணக்கம் என்பது மதம் சார்ந்த நூல். தம்பிரான் - தாமே + பிரான் எனப் பிரித்து  அனைத்தையும் படைத்தவன் தாமே எனவும் பொருள் கொள்ளலாம். இதன்படி தம்பிரான் என்பது இறை. 

;