headlines

img

உச்சநீதிமன்றத்தின்  எச்சரிக்கை பலனளிக்குமா?

மோடி அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த ஆலோசனையை ஏற்க மத்திய அரசு ஏற்கெனவே மறுத்துவிட்டது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடன் பேசுவதற்கு குழு அமைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்என தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணைதிங்களன்று மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வின் விசாரணையின்போது விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு ஆக்கப்பூர்வ மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் தற்கொலைசெய்து இறந்துள்ளனர். பெண்களும் போராட்டத் தில் பங்கேற்றுள்ளனர். அங்கே என்ன நடக்கிறது, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனினும் இதை நிறைவேற்றியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம்பிடிப்பது ஏன் என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டு மக்கள் இதுவரைஎழுப்பிய கேள்விகளை தற்போது உச்சநீதிமன்ற மும் எழுப்பியுள்ளது. 

பேச்சுவார்த்தையின்போது என்ன நடக்கிறதுஎன்று எங்களுக்கு தெரியவில்லை. வேளாண் சட்டங்களை தற்காலிகமாகக் கூட நிறுத்திவைக்க அரசு மறுக்கிறது. அப்படி நிறுத்திவைத்தால் விவசாயிகளுடன் பேச குழு அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும். இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்க அரசுத் தரப்பில் முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்து மோடி அரசு தொடர்ந்து மூர்க்கமாக மறுத்துவருகிறது. பேச்சுவார்த்தைகளின்போது விவசாயிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளைக் கூட ஏற்காமல் இழுத்தடித்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யலாம் என்பதே அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஆனால் விவசாயிகள் மேலும் மேலும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நீதிமன்றத்தின் தலையீடு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழுந்தன. போராட்டத்தை நிறுத்துமாறு கூட அரசின் தூண்டுதலின் பேரில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனினும், தற்போது உச்சநீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கைக்காவது மோடி அரசு செவிசாய்க்குமா என்பது சந்தேகமே. ஏனெனில்  இந்த சட்டங்களை பயன்படுத்திக்கொண்டு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் திருவிளையாடலை ஏற்கெனவே துவங்கிவிட்டனர். அவர்களின் கொள்ளைக்கு துணைபோகும் மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளின் குரலை கேட்கமறுக்கிறது. உச்சநீதிமன்றம் தன்னுடைய எச்சரிக்கையின்படி வேளாண்சட்டங்களை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்.அதுஒன்றே மோடி அரசுக்கு தரப்படும் குறைந்தபட்ச எச்சரிக்கையாக அமையும்.
 

;