headlines

img

ஏழைகளிடமிருந்து பறித்து...

மாதம் மும்மாரி பொழிகிறதா என்று முந்தைய காலத்தில் மன்னர்கள் மந்திரிமார்களிடம் கேட்பார்கள் என்று கதை சொல்லப்படும். ஆனால்இப்போது மாதம் மூன்று முறை விலையேற்றப்படுகிறதா என்று முடிசூடா மன்னர் என்ற நினைப்புடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திரமோடி கேட்டாலும் கேட்கக்கூடும். 

மக்கள் தங்கள் இல்லங்களில் அடுப்பு எரியவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால்மத்திய பாஜக ஆட்சியாளர்களோ அவர்களின் உள்ளங்களில் அடுப்பு எரிய வைக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை விலையேற்றி நூறு ரூபாயை அதிகரித்தனர். அதுபோதாது என்று மார்ச் 1 அன்று மேலும் 25 ரூபாயை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின்வயிற்றில் அடித்திருக்கிறார்கள்.இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.835ஆக உயர்ந்துள்ளது. அதுவே மதுரையில் ரூ.860 ஆக அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் அடுத்த மாதத்தில் ஆயிரம்ரூபாயை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளது. மத்தியபாஜக ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்ததுமே எரிவாயுவுக்கு மானியம் வழங்குவதை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறி முதலிலேயே பணத்தை மக்களிடமிருந்து எரிவாயு முகமைகளை வசூலிக்கச் செய்தனர். பின்னர் உங்கள் கணக்கில் அந்தப் பணம்வரவு வைக்கப்படும் என்று கூறினர். ஆரம்ப காலத்தில் ரூ.200 முதல் ரூ.300 வரை இந்த மானியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதோ கழுதை தேய்ந்து கட்டெறும்பு அல்ல, சிற்றெறும்பு ஆனதுபோல் ரூ.20 முதல் ரூ.30 தான் மானியமாக வழங்கப்படுகிறது. அதுவும் கூட பலருக்கு தகவல் ஏதுமின்றியும் நிறுத்தப்பட்டு விட்டது. 

இந்நிலையில் ஏதோ மானியம் இல்லாத சிலிண்டருக்கு தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயலேயாகும். ரூ.20 மானியம் என்பதற்கும் மானியம் இல்லை என்பதற்கும் என்ன வித்தியாசம்? பாஜக ஆட்சிக்கு முன்பு எரிவாயு மானியம் சிலிண்டர் விலையில் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகையையே வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. ஆனால் உங்கள் மானியம் உங்கள் வங்கிக் கணக்கில், உங்களுக்கே நேரடியாக வந்து சேரும் என்றும் இடையில் உள்ள ஏஜென்சிகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்றும் நாக்கில் தேன் ஒழுக பேசி பின்னர் மக்கள்தலையில் மிளகு அரைத்து விட்டார்கள். சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு ஆனால் எமக்கோ உயிரின் வாதை என்றார்பாவேந்தர் பாரதிதாசன். இன்றைய ஆட்சியாளர்களுக்கோ சாதாரண ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வசூல் செய்து பெரு முதலாளிகளுக்கு சலுகையாக பெரும் தொகையை வழங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால்பிரதமர் உஜ்வாலா யோஜனா எனும் திட்டத்தின் பெயரில் கோடிக்கணக்கானோருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியதாக பீற்றிக் கொள்வார்கள். அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே, செல்வத்தை தேய்க்கும் படை என்ற வள்ளுவரின் வாக்கு. வரும் தேர்தலில் மத்தியஆட்சியாளர்களின் ஆணவத்தை அடியோடு அழித்து விடும் என்பது நிதர்சனம்.

;