headlines

img

வெட்கக் கேடு... (மோடியின் பிரச்சார பீரங்கியாக மாறிய எடப்பாடி)

வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் அனைத்துப் பகுதி விவசாயிகளும் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்தங்களில் பிரதான பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டார். செல்லுமிடமெல்லாம் வேளாண் விரோத சட்டத்தை ஆதரித்து பேசி வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகைபெற்றுத் தரப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதமாக கூறியுள்ளார். தமிழகத்தில்தான் பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவு மோசடி நடந்துள்ளது என்பதையும் அவர் சேர்த்து கூறியிருக்கலாம். இந்த மோசடி தொடர்பாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் பெரும் லாவணிக் கச்சேரி நடைபெற்றது மறந்துவிடக் கூடியது அல்ல.விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்க விளைப் பொருட்களுக்கு இரட்டிப்பு விலைகிடைக்கவும், இடைத்தரகர் இன்றி அரசே நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டம் அரசுநேரடி கொள்முதல் செய்வதையே இல்லாமல்ஆக்குகிறது. இதனால் உடனடி பாதிப்புக்கு உள்ளாவதால்தான் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் முன்களத்தில் நின்று போராடுகிறார்கள். இந்தச்சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் டெல்டா பகுதி உள்பட நேரடி நெல் கொள்முதல் என்பது கேள்விக்குறியாகும்.

இதை தமிழக விவசாயிகளிடம் மறைத்து, விவசாயிகளை பிள்ளைகள் போல இந்த அரசு பாதுகாக்கிறது என்றும் விவசாயிகளின் பாதுகாவலனாக தமது அரசு விளங்குகிறது என்றெல்லாம் வீரவசனம் பேசுவதில் பொருள் இல்லை.தமிழக அரசு சார்பில் மாவட்டம் தோறும் 20 கோடி செலவில் குளிர் பதனக் கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது நல்ல திட்டம்தான். ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டம் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் ஒப்பந்தமுறைக்குள் தள்ளுகிறது. இதனால்தான் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் பிரம்மாண்டமான குளிர்பதன கிடங்குகளை கட்டிவைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

வேளாண் பொருட்களை மலிவு விலைக்குகொள்முதல் செய்து பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளையடிப்பதே அவர்களது நோக்கம். இதெல்லாம் முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.எனினும்அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழகத்தின் நலனை காவு கொடுத்துவரும் அதிமுக அரசுதமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காவு கொடுக்க துணிந்துவிட்டது. கேரள சட்டமன்றத்தில் இடது ஜனநாயகமுன்னணி அரசு வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜகவேஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு பாஜகவைவிட அதிமுக வேளாண் விரோதச் சட்டத்திற்கு வக்காலத்து வாங்குவது வெட்கக் கேடானது.

;