headlines

img

அனுமதி கோரலா? மீறலா?

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு ஒன்றிய அரசாலும், தமிழ்நாடு அரசாலும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பெருமளவில் கூடும் அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்ற ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கைஎடுக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 

ஆனால் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தடையை மீறப் போவதாக அறிவிக்கிறார். அத்துடன் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசுஅனுமதியளிக்கக்கோரி வரும் 10, 11, 12  ஆகியதேதிகளில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளைவைத்து பூஜை செய்யவுள்ளோம் என்று ஞாயிறன்று சிவகாசியில் கலவர பட்டாசை கொளுத்திப்போட்டுள்ளார். உண்மையிலேயே விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாடுவதற்குத்தான் இந்த அறிவிப்பா? விநாயகர் சதுர்த்தி வரும் 10 ஆம் தேதியன்றுதான். ஆனால் 11,12 தேதிகளையும் ஏன் கூடுதலாகதேர்ந்தெடுத்திருக்கிறார் அண்ணாமலை. அனுமதிகோருவதே உண்மையான நோக்கமெனில் சதுர்த்திக்கு முந்தைய தினங்களில் அல்லவா இத்தகைய நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அவர் அறிவித்திருக்க வேண்டும். அதிலும் கூட ‘லாஜிக்’ இடிக்கிறதே? 

முன்பு விநாயகர் சதுர்த்தி என்பது சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட அனைவராலும் பொரி, அவல், கொழுக்கட்டை முதலியவற்றோடு கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்துத்துவா வெறியுடன் இந்து முன்னணி உள்ளிட்ட பாஜக பரிவாரங்கள் தலையெடுத்த பின்புதான் பீரங்கி பிள்ளையார் போன்ற பிரம்மாண்ட சிலைகளும், விழாக்களும், ஊர்வலங்களும் நடத்தப்பட்டு மத நல்லிணக்கத்துக்கு இடையூறு  ஏற்படுத்தும் வகையில் சிக்கலாக்கப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தி விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் மகாராஷ்டிராவில் கூட கொண்டாட்ட ஊர்வலங்களுக்கு ஒன்றிய அரசின்அறிவுறுத்தலின்படியே தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான் கணபதி வழிபாடு நரசிம்ம வர்ம பல்லவன் காலத்தில் தமிழகத்திற்கு அறிமுகமானது. அதனால்தான் வாதாபி கணபதி என்று பிள்ளையார் அழைக்கப்படுகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.இப்போது கொரோனா இரண்டாவது அலைமுடிந்ததா? மூன்றாவது அலை துவங்கியதா? என்றகுழப்பமான சூழ்நிலையே இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு தடுப்பூசி செலுத்துவதில் காட்டுகிற மெத்தனமான, அலட்சியமான போக்கினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. 

130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில் வெறும் 68 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக கூறுவதே அதன் நிலையை வெளிப்படுத்தும். இந்நிலையில் ஒரு லட்சம் விநாயகர்சிலைகளை வைத்து அனுமதி கோருவதற்காக பூஜைசெய்யப் போகிறோம் என்று அண்ணாமலை கூறுவது பரவலை தடுப்பதற்கு உதவுமா? அல்லது மதபதற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிகோலுமா? எனவே தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி விழிப்புடன் இருந்து கண்காணித்து அமைதியை ஏற்படுத்திட வேண்டும்.

;