headlines

img

தோல்வியுற்ற சீர்குலைவுத் திட்டம்...

தில்லியில் 62 நாட்களுக்கு மேலாக கடும் குளிரிலும்  போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்கும் மோடி அரசின் திட்டம் மீண்டும் தோல்வியையே தழுவியிருக் கிறது.

விவசாயிகளைக் கேட்காமலே வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசு, அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவே முயல்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த அதிகாரத்திமிர் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.தொடர்ந்து பாஜக, சமூக  ஊடக அடியாட்கள்மூலம் மோடி அரசு   விவசாயிகள் போராட்டத்தை எந்தளவிற்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவிற்கு இழிவுபடுத்துகிறது. இதுவரை போராட்டக்களத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கடந்த 60 நாட்களாக சிறு அசம்பாவிதம் இன்றி அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.  இந்நிலையிலும் கூட மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முன்வரவில்லை. 

பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளை ஏமாற்றவே முயன்றது. 10வது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை 18 மாதம்நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை மத்திய அரசு எப்படி நிறுத்தி வைக்க முடியும் என்ற விவசாயிகளின் கேள்விக்கு பதில் இல்லை. இந்நிலையிலேயே குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவது என சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்தது. அந்த பேரணியைமுடக்குவதற்கு பகீரத முயற்சியை மேற்கொண்ட மோடி அரசு; உச்சநீதிமன்றத்தையும் பயன்படுத்த முயன்றது. ஆனால், உச்சநீதிமன்றம் காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த மோடி அரசு, ஏற்கனவே விவசாயிகளுக்கு அனுமதித்த வழிகளையும் மறித்து தடுப்புகளை அமைத்தது. மேலும் திடீரென மத்திய காவல்படையை ஏவி தடியடி நடத்தியது. தொடர்ந்து  கண்ணீர் குண்டுகளை வீசியும் பேரணியை சீர்குலைக்க முயன்றது வெட்கக்கேடான செயல் ஆகும்.

மறுபுறம்  செங்கோட்டையில் விவசாயிகள் போர்வையில் சங்பரிவார் குழுவினரை அனுமதித்து வன்முறையை ஏவி விட்டிருக்கிறது. அப்படி வன்முறையில் இறங்கியவர்களை, விவசாயிகள் அடையாளம் கண்டு இதுவரை 13 சங்பரிவார் ரவுடிகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது அமித்ஷாவின் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது வன்முறைக்கு தாங்களும்உடந்தை என்பதை மோடி அரசு ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் அமைதியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் மீது மோடி அரசு போராட்டத்தை திசைதிருப்பும் வகையில், சதிவழக்கு உள்ளிட்ட பல்வேறு  பொய்வழக்குகள் புனைந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. விவசாயிகள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனே வாபஸ்பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். 

;