headlines

img

பின்வாங்கலா? பின்வாசலா?

காலத்தின் தேவைக்கேற்ப கல்விக் கொள்கை மாற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த மாற்றம் என்பது முன்னேற்றமாக இருக்க வேண்டுமேயன்றி சமூகத்தை பின்னுக்கு இழுப்பதாக, ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக இருக்கலாகாது. மத்தியில் பாஜக கூட்டணி அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து தங்களது நோக்கத்திற்கேற்ப கல்வித்துறையை கட்டமைக்க முயன்று வருகின்றனர். ஒருபுறத்தில் கல்வித்துறையை கொஞ்ச கொஞ்சமாக தனியார்மயமாக்கி காசுஉள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்குவது, மறுபுறத்தில் தங்களதுபிற்போக்கு கொள்கைகளையும் சித்தாந்தங்களையும், இளைய தலைமுறையின் மூளைகளில்குப்பைகளைப்போல கொட்டுவது என்பதை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்தலைமையில் அமைக்கப்பட்ட குழு வெளியிட்டுள்ள கல்விக்கொள்கை வரைவு மறைமுகமாக ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் கல்விக்கொள்கையை திணிப்பதாகவே உள்ளது. குறிப்பாக இந்தக்குழு முன்மொழிந்துள்ள மும்மொழிக் கொள்கை இந்தியாவில் மீண்டும் ஒரு மொழிப் போரை மூள வைப்பதாக அமைந்துள்ளது. அவரவர் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் உயர்நிலைப்பள்ளியிலிருந்து இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்றுஇந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகம், மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்தி திணிப்புக்கெதிராக கடும் கண்டனக்குரல்கள் எழுந்தன. எந்தவொரு மொழியையும் விருப்பத்தின் அடிப்படையிலோ, தேவையின் அடிப்படையிலோ கற்றுக் கொள்வதற்கு எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கான வாய்ப்பும் வசதிகளும் செய்துதரப்பட வேண்டும். ஆனால் கஸ்தூரி ரங்கன்குழுபரிந்துரைப்பது அப்பட்டமான இந்தி திணிப்பாகும்.கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்தியைத்தான் படிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை கற்க வேண்டியது அவசியம் என்று வரைவை திருத்தி விட்டதாக மோடி அரசும், கஸ்தூரி ரங்கனும் கூறுகின்றனர்.இது தற்காலிக பின்வாங்கலே அன்றி இந்தித் திணிப்பை இவர்கள் கைவிட்டுவிடவில்லை. மூன்றாவது ஒரு மொழி கட்டாயம் எனும் போதுஇந்தியைத்தான் தமிழகத்தில் படிக்க வேண்டியிருக்கும் என்பதை மறைமுகமாக புகுத்துகின்றனர். மூன்று மொழிகளை படித்தேயாக வேண்டும் என்பது ஒருமைப்பாட்டுக்கும் கூட்டாட்சிக்கும்  எதிரானது மட்டுமல்ல, பெரும் பகுதி மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து விரட்டும் சதியுமாகும். எனவே மும்மொழி திட்டம் முற்றாக கைவிடப்படும் வரை ஆபத்து அகன்று விடவில்லை என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

 

;