headlines

img

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?

“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்”  என்கிறது திருக்குறள்.அதாவது வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடும் செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பற்றாக்குறையை சரிக்கட்டி முதலீட்டைஈர்க்க  அரசின் கையில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விற்று வருகிறது. 

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த ‘பர்மாஷெல்’ நிறுவனம். 1976ல் தேசிய மயமாக்கப்பட்டு பி.பி.சி.எல் நிறுவனமும், ‘எஸ்ஸோ’ நிறுவனத்தை1974 ல் தேசிய மயமாக்கி எச்.பி.சி.எல்  நிறுவனமும் உருவாக்கப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்களை  2016 ல் மோடி அரசு நடைமுறையில் இல்லாத 187 சட்டங்களின் பட்டியலில் இணைந்து  நயவஞ்சகமாக  ரத்து செய்தது. அந்த துரோகத்தின் தொடர்ச்சியாகவே  தற்போது, “மகாரத்னா” மதிப்பை பெற்ற  எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தை கூறு போட்டு கூவி விற்கிறது.  இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77 சதவிகிதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81 சதவிகித பங்களிப்பை செய்து வருகிறது ஓஎன்ஜிசி. இது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமாகலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாகும்.  இந்த நிறுவனத்தை  மோடியின் நெருங்கிய கூட்டாளிகளான அதானி, அம்பானிக்கு  கூறு போட்டு பந்திவைக்க  துடியாய் துடிக்கிறது.  அதன் தொடக்கமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தை எண்ணெய் கிணறு தோண்டுதல், விற்பனை சேவைகள், குழாய் அமைத்தல், பதிவு செய்தல், பணித்திறன் சேவைகள் ஆகியவற்றை முதலில் தனித்தனி துறையாக பிரிக்கும் செயல் திட்டத்தை  ஓஎன்ஜிசிக்கு அனுப்பியிருக்கிறது. அதில்  4 நாட்களுக்குள்  ஓஎன்ஜிசியின் பொறுப்புதலைவர் சுபாஷ்குமார் பதிலளிக்க வேண்டும் என மிரட்டியிருக்கிறது.

அந்த திட்டத்தின் படி மேற்கு பிராந்தியத்தில் ரத்னா ஆர்,  பானா முக்தா கடல் துறை மற்றம் குஜராத்தின் காந்தார், கிழக்கு பிராந்தியத்தில் தினதயாள் மேற்கு பிரிவு, கொல்கத்தா அசோக்நகர் பிரிவும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு மகாரத்னா அதிகாரிகள் சங்கம் (காம்கோ) மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஃபோபோ) கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. அரசிற்கு லாபம் ஈட்டி தரும் நிறுவனங்களை விற்பது. அரசின் வருவாயை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றும் செயலே ஆகும்.பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் நீண்ட கால இழப்பை அரசு சந்திக்க நேரிடும். இது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் செயல்ஆகும். நாட்டின் மிக முக்கியமான துறையானஎரிசக்தி துறையை தனியார் மயமாக்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது தேசத்திற்கு செய்யும்மிகப்பெரிய துரோகம் ஆகும். பொதுத்துறை நிறுவன புறக்கணிப்பின் கொடூரத்தை கொரோனா உணர்த்திய பின்னும் ஆட்சியாளர்கள் வெறி அடங்கவில்லை.

;