headlines

img

புதிய சகாப்தம் துவங்கட்டும்

தேச விடுதலை எனும் இந்தியாவின் ஜனநாயகப் புரட்சி 75 ஆண்டுகள் என்கிற ஒரு வரலாற்று சகாப்தத்தை எட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மட்டு மல்ல; அமெரிக்கா உள்ளிட்ட பழமையான ஜன நாயகம் என்று சொல்லப்படும் நாடுகளை யெல்லாம் விட பெண்கள் உள்பட அனைத்துக்  குடிமக்களுக்கும், விடுதலை பிறந்த போதே வாக்குரிமையை உறுதிசெய்த உலகின் பழமை யான ஜனநாயகம் எனும் பெருமிதங்களையும்; வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களையும் உயர்த்திப் பிடித்து நடைபோடும் சுதந்திர இந்தியாவின் வயது இன்றைக்கு 75. வயது கூடக் கூட சுதந்திர இந்தியாவின் இளமைப் பொலிவு கூடுகிறது.  நவீன வளர்ச்சி வடிவங்களைப் பெற்ற புதிய தலைமுறையின் தேசமாக பீடுநடை போடுகிறது. 

பரந்து விரிந்த நம் இந்திய தேசம் 1618 மொழிகள்,  6400சாதியப் பிரிவுகள், 6 பெரிய மதங்கள், 6 வெவ்வேறு விதமான மானுடவியல் கூறுகள், 29 மத - கலாச்சார விழாக்கள், எண்ணற்ற வகை யிலான உணவுப் பழக்க வழக்கங்கள்... உலகின் வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காத அரியதோர் அதிசயம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுமார் 200 ஆண்டு காலமாக நடைபெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் அடிநாத மாக திகழ்ந்தவர்கள் இந்த நாட்டின் குறுக்கிலும், நெடுக்கிலுமாக பரவியிருக்கும் கோடானுகோடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்தான் என்றால் மிகையல்ல. 

75 ஆண்டுகள் எனும் மாபெரும் சகாப்தத்தை கொண்டாடும் அதேவேளையில், விடுதலைக்கு வித்திட்ட எளிய பாட்டாளி மக்களின் நிலை  இன்னும் கவலைக்கிடமானதாகவே உள்ளது.இன்னும் குறிப்பாக, விடுதலைப் போரில் துளி அள வும் தொடர்பில்லாத, விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கயவர் கூட்டத்தின் கைகளில் இந்திய நாடு சிக்கியிருக்கிறது. அவர்களது ஆட்சி தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைச் சூறையாடுகிறது; விவசாய வர்க்கத்தை விளை நிலங்களிலிருந்து வெளியேற்றி, நிலங்களையும், வளங்களையும் பெரும் கார்ப்பரேட் முதலாளி களுக்கு கைமாற்றிவிடத் துடிக்கிறது; கடந்த ஒரே மாதத்தில் வேலையில் இருந்த 1.30 கோடிப்  பேரின் வேலை பறிக்கப்பட்டு வீதியில் விரட்டப்பட்ட அவலத்தோடு சேர்த்து, இந்திய இளைஞர்களை வேலையில்லா பட்டாளமாக வீதியில் நிறுத்தி வைத்திருக்கிறது; பாலியல் வன்கொடுமையும் குடும்ப வன்முறைகளும் இல்லாத ஒரு நிமிடம் கூட இல்லை என்ற நிலைக்கு இந்தியப் பெண்களை துயரத்தின் விளிம்பில் தள்ளியிருக்கிறது. 

ஒட்டுமொத்தத்தில், பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும், இந்தியாவில் ஆளும் வர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சமூக - பொருளாதார விடுதலையை நோக்கிய பயணம் நீள்கிறது. அத்தகைய முழு விடுதலைக்கான உத்வேகத்தை அளிக்கட்டும் 75ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்.

;