headlines

img

தவறான அறிகுறி!

நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்திய மக்களாகிய நாம் முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை கொண்ட, சமத்துவ, சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாகக் கட்டமைத்திட உறுதியேற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் வழக்குகளை மற்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும், சட்டத்தின் முக்கியமான விஷயங்களைக் கையாளும் அரசியலமைப்பு அமர்வுகளை நியமிப்பதற்கும் பொறுப்புடையவர். மேலும் நடுநிலையாக இருந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.

அப்படிப்பட்ட தலைமை நீதிபதி தனது இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜை விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்தது சரியல்ல. மதம் சார்ந்த ஒரு நிகழ்வுக்கு பிரதமரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அழைத்திருப்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது.  

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்பட்டு வருகிறது. வட இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 நாட்கள் கணபதி திருவிழாவை கொண்டாடுவார்கள். மகா ராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் பூஜை நடத்துவதை யாரும் கேள்வி கேட்கவில்லை. நடுநிலையாக இருக்க வேண்டியவர் ஒரு கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட ஒருவரை அழைத்திருப்பதுதான் தவறு என்று பலரும் விமர்சித்துள்ளனர்.  

அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக இருக் கும் ஒருவர் அரசியல்வாதிகளைச் சந்தித்தால், அது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும்.  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான முதன்மை அமர்வு ஏராளமான அரசியல் வழக்கு களை விசாரிக்கிறது. பாஜக சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்புடைய வழக்குகளும் அதில் அடங்கும்.  

குறிப்பாக  மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. “மகாராஷ்டிராவில் கட்சித் தாவி எம்எல்ஏக்களின் ஆதரவோடு நீடிக்கும் கூட்டணி அரசாங்கத்தை காப்பாற்ற பிரதமர் கடு மையாக முயற்சிக்கிறார். மகாராஷ்டிராவில் தற் போதுள்ள அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணானது” என்று தலைமை நீதிபதி பலமுறை கூறினார்.  ஆனால் அவர் ஓய்வுபெறும் காலம் நெருங்கிவிட்ட போதிலும் இன்னும் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. எனவே பிரதமர் மோடி யை சந்தித்த பின்னர் அவர்  இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பதுதான் நியாயமாக இருக்கும்.  

ஜனநாயகத்தில், நிர்வாகமும் நீதித்துறையும் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறி உறவாடினால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்து தான்.