தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. சனிக்கிழமை 969 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்தநிலையில் ஞாயிறன்று நடைபெற்ற ஆய்வில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1075. ஞாயிறன்று அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கும், கோயம்புத்தூரில் 22 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆறு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 39,041, 28 நாள் கண்காணிப்பை நிறைவு செய்தவர்கள் 58,189, அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் 162. 10,655 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை ஆய்வு செய்வதற்கு மதுரை, சென்னை உட்பட 14 அரசு மருத்துவமனைகளுக்கும், ஒன்பது தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையும் ஆய்வு நடத்த தயார் என ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் ஆய்விற்கான பணத்தை தமிழக அரசே செலுத்தும். கொரோன தொற்று பரவல் உள்ள நிலையில் தமிழகத்தில் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.