கடந்த இரண்டு நாட்களாக வங்கம், மதவெறி மோடி அரசுக்கு எதிராக பேரெழுச்சியுடன் எழுந்து நிற்கிறது. கொல்கத்தாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, நகரின் மையப்பகுதியான எஸ்பிளனேடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கருப்புக்கொடி ஏந்தி, பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தின் ‘கோ பேக் மோடி’ (நரேந்திர மோடியே திரும்பிப் போ) என்ற முழக்கமே வரவேற்பு அளித்தது. கொல்கத்தா துறைமுக பொறுப்புக் கழகத்தின் 150ஆம் ஆண்டு விழா உள்பட இரண்டு நாட்கள் அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த மோடி, மக்களை சந்திக்க முடியாமல், சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்த்து அருகருகே இருக்கக்கூடிய பகுதிக்கு கூட ஹெலிகாப்டரிலும், படகு மூலமாகவும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பளிச்சென்று சொல்வதானால் மக்களுக்கு பயந்து வேறு பாதைகளில் ஓட்டம் பிடித்திருக்கிறார் இந்திய நாட்டின் பிரதமர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடு; தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிடு; தேசிய மக்கள்தொகை பதிவேட்டை உருவாக்காதே என்ற முழக்கங்களை மேலும் மேலும் உயிர்ப்புள்ள தாக்கி வருகிறார்கள் இந்திய தேசத்தின் இளைய தலைமுறையினர். அதற்கு இன்னும் எழுச்சிமிக்க வடிவத்தை அளித்திருக்கிறார்கள் வங்கத்துச் சிங்கங்கள். பிரதமர் செல்லும் இடமெல்லாம் திரும்பிப் போ என்கிற முழக்கத்தை எழுப்புங்கள் என இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியிருக் கிறார்கள். இந்த மாபெரும் போராட்டத்தை வங்கத்தின் இடதுமுன்னணி தலைமையேற்று நடத்தி யிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நிற்பதாகக் கூறுகிற ஆளும் திரிணாமுல் கட்சியின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியதும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர மறுப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை அல்ல. இதை வங்கம் மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மோடியே திரும்பிப்போ என்ற முழக்கம் மட்டுமல்ல, மம்தாவே திரும்பிப் போ, திரிணாமுல்லே ஆட்சியை விட்டு வெளியேறு என்ற முழக்கங் களும் கடந்த இரண்டு நாட்களாக வங்கத்தில் விண்ணதிர எழுப்பப்பட்டிருக்கின்றன. மம்தாவின் புகழ்பாடும் ஏடுகள் கூட கடந்த சில நாட்களாக, இந்தப் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் மம்தாவை அம்பலப்படுத்தி எழுதத் துவங்கியிருக்கின்றன. தி டெலிகிராப் ஏடு, பிரதமரோடு மம்தா நடத்திய சந்திப்பை படத்தோடு வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருப்பது மட்டுமல்ல, முகப்பிலேயே ‘கோ பேக் மோடி - மம்தா’ என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. பல்லாண்டு காலமாக வங்கத்தில் மம்தாவும் பாஜகவும் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்; இடதுசாரிகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் பரஸ்பரம் மதவாதத்தை ஒரு ஆயுதமாக கையில் வைத்திருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. அதை வங்கம் இன்று கண்கூடாக உணரத்துவங்கியிருக்கிறது.