17ஆவது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் தூக்கியெறியப்படுவது உறுதி என்பதை நாடு முழுவதும் இருந்து வருகிற தேர்தல் பிரச்சார செய்திகளும், பிரச்சாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் செருப்பு மாலை போட்டும், எங்கள் பகுதிக்கு வராதே என்று கூறி அடித்து விரட்டியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற காட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. அந்த அளவிற்கு ஒட்டு மொத்ததேசத்தையும் ஐந்தாண்டு ஆட்சியில் துயரின் விளிம்பிற்கே தள்ளியிருக்கிறது மோடி அரசு. தோல்வி உறுதி என்ற நிலையில், வாய்ப்பிருக்கிற அனைத்துப் பகுதிகளிலும் வன்முறையை, கலவரத்தை கையில் எடுப்பதற்கு பாஜக தயங்கப் போவதில்லை. அதன் கூட்டணியில் சேர்ந்திருப்பவர்களும் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் அன்புமணியின் கட்சியைப் போலவே வன்முறைக்கு தயங்காதவர்கள். வடகிழக்கு எல்லையோர மாநிலமான திரிபுராவில் பாஜக கும்பல்கள் ஏற்கெனவே நிரந்தரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தருணம் முதல் இப்போது வரைஎதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் தலைவர்களையும் தோழர்களையும் குறிவைத்து தாக்குவது, முக்கியமான நிர்வாகிகளை கடத்துவது, இடது முன்னணியின் தேர்தல் அலுவலகங்களை சூறையாடுவது என மிகப் பெரும் அராஜகத்தை நடத்தி வருகின்றனர்.
திரிபுராவில் இடது முன்னணியின் தற்போதைய மக்களவை உறுப்பினரான ஜிதேந்திர சவுத்ரியும் சங்கர் பிரசாத் தத்தாவும் மீண்டும் களத்தில் நிற்கிறார்கள். பாஜகவின் சதிராட்டத்தால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி தோல்வியடைந்திருந்தாலும் கடந்தசில மாதங்களிலேயே பாஜகவின் கொடிய ஆட்சியை உணரத் துவங்கிவிட்ட திரிபுரா மக்கள், மீண்டும் இடது முன்னணி வேட்பாளர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்பன அவர்களது பிரச்சாரத்திற்கு மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பும் எதிர்பார்ப்பும் உணர்த்துகிறது. இதனிடையே, பழங்குடி மக்களின் வாக்குகளை பாஜக பெறுவதற்கு காரணமாக இருந்த ஐபிஎப்டி கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பாஜக, திரிபுராவில்தனது மாநில அரசு அதிகாரத்தை பயன்படுத்தி இடது முன்னணி வேட்பாளர்களின் பிரச்சாரத்தையே முடக்குவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. இடது முன்னணி வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாவின் பிரச்சாரத்தில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பாஜக குண்டர்களால் சூறையாடப்பட்ட சிபிஎம் மற்றும் இடது முன்னணி அலுவலகங்கள், தேர்தலையொட்டி தோழர்களின் உணர்வுப் பெருக்கோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த அலுவலகங்கள் மீது பல இடங்களில் பாஜகவினர் குண்டுவீச்சு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வன்முறையை தவிர தற்போது பாஜகவின் கையில் வேறு எதுவும் இல்லை. அதை விரட்டியடிக்கும் வாக்குகள் மக்களிடம் கோடி கோடியாக இருக்கின்றன.