headlines

img

பாஜக அடையாளத்திற்கு திரை போடும் கார்ப்பரேட் மீடியா

ஜார்க்கண்ட் பாஜக தலைவரும், ஒன்றிய அரசின் பெண் குழந்தைகளுக்கான “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சீமா  பத்ரா ஒரு பழங்குடி பெண்ணை வன்கொடுமை செய்து நாக்கால் டாய்லெட்டை கழுவச் சொன்னார் என்ற மிகக் கொடூரமான காட்டுமிராண்டித் தனமானச் செயல் நாட்டை உலுக்கிக் கொண்டு இருக்கும் வேளையில், அதற்கு இணையான இன்னொரு இழிவான செயலில் கார்ப்பரேட் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. 

சீமா பத்ரா பாஜக தலைவர் என்பதையும், இவர் கைகளில் பெண் குழந்தைகளை பாதுகாக்கிற(!!!) திட்டமான “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பொறுப்பாளர் பதவி இருந்தது என்பதையும் மறைத்து செய்திகளை வெளியிடுகின்றன. 

“டைம்ஸ் நவ்” சேனல் இந்த செய்தியை வெளியிடும் போது அது போட்ட இரண்டு ஹேஷ்  டேக்குகள் என்ன தெரியுமா? ஒன்று, #Shame Secular hypocrisy (அதாவது “வெட்கம் மதச்சார் பின்மை தம்பட்டம்”); இரண்டாவது, *#Soren MustResign*(சோரன் பதவி விலக வேண்டும்). 

குற்றவாளியான சீமா பத்ராவை ‘‘முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி’’ என்றே டைம்ஸ் நவ் அறிமுகம் செய்து இருந்தது. 

ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவன ட்வீட் செய்தியும் இப்படி இருந்தது: “29 வயது பணிப்  பெண்ணை பணி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் இருந்து ஆகஸ்ட் 22 அன்று காவல்துறை காப்பாற்றியது. அப்பெண் தனது முதலாளி தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்  சாட்டிய அடிப்படையில்...” -

பாஜக-வின் பிரச்சாரச் செய்தி நிறுவனமான OpIndia (ஓப் இந்தியா) ஆங்கிலத்திலும், இந்தி யிலும் சுற்றுக்கு விட்ட செய்திகள் இப்படி இருந் தன: ஆங்கில செய்தியில், - “நாக்கால் பழங்குடி பணிப் பெண்ணை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி மீது வழக்கு” என்று இருந்தது. 

ரிபப்ளிக் இந்தியா, டி.என்.ஏ, டைனிக் பாஸ்கர்  போன்ற ஊடகங்களும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி என்றே செய்திகளில் குறிப்பிட்டு இருந்தன. 

ஊடகங்களுக்கு உண்மை தெரியாதா? டி.ஆர்.பிக்காக பரபரப்பான செய்திகளைத் தேடி  அலையும் ஊடகங்களுக்கு சீமா பத்ரா பாஜகவின் தலைவர் என்பதைவிட வேறு என்ன செய்தி வேண்டும்? 

அவரது முகநூல் சுய விவரத்தில் “மாநில ஒருங்கிணைப்பாளர், பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ; பாஜக ஜார்க்கண்ட், மகிளா மோர்ச்சா தேசிய செயற்குழு உறுப்பினர்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  ஆனாலும் கார்ப்பரேட் ஊடகங் கள் மிகுந்த விசுவாசத்தோடு சீமா பத்ராவுக்கும் பாஜக-வுமான தொடர்பை மறைத்துள்ளன. என்னதான் மூடி மூடி மறைத்தாலும் உண்மை அதை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டது.

;