headlines

img

தேச நலனை முன்னிறுத்துவீர்!

வீழ்த்தவே முடியாத சக்தி வாய்ந்த நபர் என்ற பிம்பத்தோடு கடந்த பத்தாண்டு காலமாக மத்தியில் அதிகாரம் செலுத்தி வந்த பிரதமர் நரேந்திர மோடியும், அவரது பாரதிய ஜனதா கட்சியும் 18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பெற்ற பெரும்பான் மையை இந்தத் தேர்தலில் பாஜக இழந்துள்ளது. 

இத்தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மிக மிக பெரிய அளவிலான தனிப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று முழங்கி வந்த நரேந்திர மோடியின் கனவு நொறுங்கியுள்ளது. கடைசி கட்டத்திலும், தேர்த லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மோடி ஆதரவு ஊடகங்கள் நடத்திய கருத்துத் திணிப்பையும் மக்கள் நொறுக்கித் தள்ளி யுள்ளனர்.

18ஆவது மக்களவைத் தேர்தலானது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகள் மீதான ஆளும் ஒன்றிய அரசின் இடைவிடாத தாக்குதல்கள், ஒன்றிய அரசின் விசாரணை முகமைகள் மூலம் ஏவப் பட்ட மிக மோசமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அளவில்லாத பணபலத்தின் பயன்பாடு என்ற முறையிலேயே நடந்து முடிந்தது. தேர்தல் ஆணையம் ஒரு துளி அளவிற்குக் கூட ஆளும் பாஜகவின் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்டு கொள்ளவில்லை. 

இத்தகைய நிலையிலும் கூட எதிர்க்கட்சி களின் மாபெரும் அணிவகுப்பாம் இந்தியா கூட்டணி, கணிசமான இடங்களில் - பாஜக வின் தனிப் பெரும்பான்மையை தகர்த்து  நொறுக்கும் விதத்தில் - மிகுந்த பாராட்டுத லுக்கு உரிய முறையில் தனது செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் பாஜகவும் மோடி உள்ளிட்ட அதன் பிரச்சாரகர்களும் முழுக்க முழுக்க மதவெறியை உமிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி உள்ளிட்ட எரிந்து கொண்டிருக்கிற மக்கள் பிரச்சனைகளையும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களையும் பிரச்சாரம் நெடுகிலும் மக்கள் முன்பு வைத்தது. இந்தியா கூட்டணி யின் இந்த பிரச்சாரமே, அநேகமாக இந்திய நாடு முழுவதுமே மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.  

பாஜக தலைமையிலான கூட்டணி 290 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், இக்கூட்ட ணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றவர்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தலைமை சில நகர்வுகளை மேற்கொண்டுள்ள தாகத் தெரிகிறது. அணி மாறுவது அவர்களுக்குப் புதிதல்ல. இந்த முறை தேசத்தின்  நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் அப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள். 

;