games

img

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில், 6வது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த கால்சனை 6– 0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதனைத்தொடர்ந்து மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின்
 இச்ரக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, 5 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று மதியம் தொடங்கி நடைபெற்றது. இதில், இந்தியாவின் தீபிகா குமாரி, கலந்துகொண்டார். முதலில் நடைபெற்ற போட்டியில், பூடான் வீராங்கனையை 6 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த தீபிகா குமாரி, அடுத்து நடைபெற்ற போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6 – 4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி, இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்திய பிவி சிந்து, இன்று நடைபெற்ற குரூப் சுற்றின் 2வது போட்டியில் ஹாங்காங்கைச் சேர்ந்த செயுங்கை எதிர்கொண்டார். 21-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

தற்போதைய நிலவரப்படி ஜப்பான் 13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலங்களுடன் முதல் இடத்திலும்,  சீனா 12  தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 2வது இடத்திலும், அமெரிக்கா 11 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 3வது இடத்திலும் உள்ளது. 

;