games

img

விளையாட்டு...

சென்னை ஒருநாள் கோப்பை யாருக்கு?

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் (வெள்ளியன்று - மும்பை) இந்திய அணி 5 விக்., வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டியில் (விசாகப்பட்டினம்) ஆஸ்திரேலிய அணி 10 விக்., வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதனன்று சென்னையில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை வெறுங்கையோடு தாய்நாட்டுக்கு அனுப்பும் முனைப்பில் இந்திய அணியும், டெஸ்ட் தொடர் இழந்ததற்கு பதிலடியாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 3-வது ஒருநாள் தொடர் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : மதியம் 1:30 மணிக்கு
இடம் : எம்.ஏ சிதம்பரம் மைதானம், சென்னை 
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட்ஸ்டார் 
(சந்தா செலுத்தினால் மட்டும் ஸ்மார்ட் போனில் பார்க்கலாம்)

2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில்...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 107 ஆண்டுகால பழமையான கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் 1916-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது சாதாரண போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 1934-ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையே சர்வதேச போட்டி (டெஸ்ட் போட்டி) நடத்தும் வாய்ப்பை சென்னை மைதானம் பெற்றது. தொடர்ந்து 1987-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியும், 2012-ஆம் ஆண்டு டி-20 போட்டியும் நடைபெற்றது. தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் உலகின் முக்கிய மைதானமாக வலம் வரும் சென்னை சேப்பாக்கம் மைதானம் கொரோனா காலகட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கேலரி தொடர்பாக தடை ஆணை பெற்றது. இந்த தடையால் சர்வதேச போட்டி, ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கவில்லை. கடைசியாக 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டு காலம் போட்டி நடத்தப்படவில்லை. தடை உத்தரவை சாதகமாக எடுத்துக்கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு மைதானத்தை பிரம்மாண்டமாக மாற்றியது. தற்போது தடை உத்தரவு நீங்கி சென்னை மைதானம் டிப் டாப்பில் உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டி களம் காண்கிறது.

துருக்கி, சிரியாவுக்கு 4,000 உலகக்கோப்பை குடிசைகள்

கத்தார் நாடு உதவிக்கரம்

கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கடுமையான அளவில் உயிர்சேதம், பொருட்சேதத்துடன் துருக்கி, சிரியாவின் ஒரு பகுதிகள்  உருக்குலைந்த நிலையில், இருநாடுகளிலும் சேர்த்து 57,300 பேர் (துருக்கி - 52,100, சிரியா - 7200) உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தெருவில் வசித்து வரும் நிலையில், கத்தார் அரசு துருக்கிக்கு தற்காலிக வீடு களை இலவசமாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற்ற 22-வது சீசன் உலகக் கோப்பை தொடரில் ரசிகர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்ட 4,000  கேபின்களை (தற்காலிக குடிசைகள்) கத்தார் அரசு அனுப்பியுள் ளது. மேலும் 10,000 கேபின்களை 2-ஆம் கட்டத்தில் அனுப்புவதாக கத்தார் அரசு கூறியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


 

 

;