games

img

எலிமினேட்டரில் மும்பை-உத்தரப்பிரதேசம் இன்று பலப்பரீட்சை

டபிள்யுபிஎல் தொடர் : இறுதிக்கு முன்னேறுவது யார்?

எலிமினேட்டரில் மும்பை-உத்தரப்பிரதேசம் இன்று பலப்பரீட்சை

இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் என்ற பெயரில் டி-20 லீக் நடத்தப்படுவது போல, நடப்பாண்டு முதல் டபிள்யுபிஎல் என்ற பெயரில் மகளிர் டி-20 லீக் தொடர் கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கியது.  இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நிறைவு  பெற்ற நிலையில், தில்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கும், மும்பை - உத்தரப்பிரதேசம் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கும் தகுதி பெற்றன. இந்நிலையில், வெள்ளியன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை - உத்தரப்பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தில்லி அணியுடன் மோதும்.

உத்தரப்பிரதேசம் - மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பாட்டில் மைதானம், நவிமும்பை
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)

மியாமி ஓபன் டென்னிஸ் சீனியர் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த இளம் வீரர்கள்

அமெரிக்காவின் முக்கிய டென்னிஸ் தொடர்களில் ஒன்றான மியாமி ஓபன் டென்னிஸ் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது.  இந்த தொடரில் தற்போது முதல் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 41 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவருமான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, பெரியளவு சர்வதேச பின்புலம் இல்லாத செர்பியாவின் டூசனிடம் 4-6, 5-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.  மேலும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரிட்டனின் எட்மண்ட், இத்தாலியின் போக்னினி, பிரான்ஸ் மோனோபில்ஸ் ஆகியோரும் முதல் சுற்றில் வீழ்ந்தனர். முதல் சுற்றில் வெளியேறிய சீனியர் வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களிடம் வீழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மகளிர் பிரிவில் பெரியளவு அதிர்ச்சி தோல்வி அரங்கேறவில்லை என்றாலும், உள்ளூர் வீராங்கனை ஸ்டீபென்ஸ் மட்டும் சக நாட்டு (அமெரிக்கா) வீராங்கனையான ரோஜர்ஸிடம் 4-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். இந்த தொடரில் இந்திய நட்சத்திரங்கள் இன்னும் தொடக்க சுற்று ஆட்டங்களில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  (வியாழனன்று மாலை நிலவரம்)

குழப்பம் : 144 கோடி பரிசுத்தொகை?

34-வது மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் மொத்தம் ரூ.144 கோடி (1,76,00,000 அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை என பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடவர் பிரிவுக்கு ரூ.72 கோடியும் (88,00,000 அமெரிக்க டாலர்), மகளிர் பிரிவுக்கு ரூ. 72 கோடி (88,00,000 அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை என தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பரிசுத்தொகை ரூ.495 கோடியாக இருக்கும் நிலையில், சாதாரண ஏடிபி தொடர் ரூ.144 கோடி பரிசுத்தொகை அறிவித்திருப்பது ஒருவித அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. (பரிசுத்தொகை ஆதாரம் : விக்கிப்பீடியா)



 

;