உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 : அட்டவணை வெளியானது
விளையாட்டு உலகின் மிகப்பெரிய தொடரான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் 13-வது சீசன் இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை செவ்வாயன்று வெளியிடப்பட்டது. சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, அகமதாபாத், கவுகாத்தி, தில்லி, பெங்களூரு, மும்பை, தர்மசாலா, புனே ஆகிய 12 மைதானங்களில் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி கொல்கத்தாவிலும், 2-வது அரையிறுதி மும்பையிலும், உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம், இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா - அக்., 8 (சென்னை)
ஆப்கானிஸ்தான் - அக்., 11 (தில்லி)
பாகிஸ்தான் - அக்., 15 (அகமதாபாத்)
வங்கதேசம் - அக்., 19 (புனே)
நியூசிலாந்து - அக்., 22 (தர்மசாலா)
இங்கிலாந்து - அக்., 29 (லக்னோ)
தகுதிச் சுற்று அணி - நவ., 2 (மும்பை)
தென் ஆப்பிரிக்கா - நவ., 5 (கொல்கத்தா)
தகுதிச் சுற்று - நவ., 11 (பெங்களூரு)
தமிழ்நாட்டில் 5 போட்டிகள்
13-வது சீசன் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 5 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 5 ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி பங்கேற்கிறது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா(அக்., 8)
நியூசிலாந்து - வங்கதேசம்(அக்., 14)
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்(அக்., 18)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்(அக்., 23)
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா(அக்., 27)
இந்தியா.. ஞாயிறு... 2:00 மணி...
உலகக்கோப்பை ஆட்டங்கள் காலை, பகலிரவு என இரண்டு நேரங்களில் நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் ஆட்டங்கள் காலை 10:30 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் மதியம் 2:30 மணிக்கும் தொடங்குகிறது. இந்தியா மோதும் அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது. முக்கியமாக இந்திய அணி விளையாடும் 9 போட்டிகளில், 5 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர், மொஹாலி புறக்கணிப்பு
நாட்டில் மொத்தம் 25 சர்வதேச மைதானங்கள் உள்ளன. இதில் 12 மைதானங்களில் மட்டுமே உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகிறது. நாட்டின் முக்கிய ஸ்டார் அந்தஸ்து உள்ள மைதானங்களான மொஹாலி (பஞ்சாப்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) உலகக்கோப்பையிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஆகிய மைதானங்களிலும் உலகக்கோப்பையில் ஒரு ஆட்டங்கள் கூட ஒதுக்கப்படவில்லை. மொஹாலி, ஜெய்ப்பூர் மைதானங்களை ஏன் உலகக்கோப்பை யில் சேர்க்கவில்லை? என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி
139 ஆண்டுகால பாரம்பரிய கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரின் 73-வது சீசன் இங்கி லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் (பிர்மிங் ஹாம்) ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதனன்று தொடங்கு கிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் லார்ட்ஸ் ஆஷஸ் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : லார்ட்ஸ், லண்டன்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ்
மழை : விளையாட வாய்ப்புள்ளது